பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

9

மல்லிகா, சிரித்துக்கொண்டே இருவர் தோளிலும் கைபோட்டபடி "நான் ஒண்ணும் கோபமும் படல. வருத்தமும் படல. நீங்கள் யாரைப் பேசினாலும், எப்படிப் பேசினாலும். எனக்குக் கவலையில்லை. என் கவலையெல்லாம் நீங்கள் சண்டை போடக்கூடாது என்கிறதுதான்" என்று சொல்லிக்கொண்டே அவர்களின் இருவரின் கைகளையும். தன் இரு கரங்களால் பலமாகப் பிடித்துக்கொண்டாள்.

அந்தப் பிடியின் பலத்தை கணக்கில் வைத்துப் பார்த்தால், மல்லிகா, ஏதோ பலவீனப்பட்டுக் கொண்டு இருப்பதுபோல் தோன்றியது.

அவர்களின் கைகளைப் பிடித்திருப்பது, "என்னை கைவிட மாட்டீர்களே" என்று சொல்லாமல் சொல்வது போலிருந்தது.


3

வடசென்னையில், 'வண்ணாரப்பேட்டை' என்று வாயாலும், 'வண்ணையம்பதி' என்று எழுத்தாலும் அழைக்கப்படும் பகுதி; அதில் நெருக்கமான வீடுகள் கொண்ட ஒரு சுருக்கமான தெரு. அந்தத் தெருவை, கிராமத்துப் பாணியில் சொல்வது என்றால், 'முக்கடி - முடங்கடி' என்று சொல்லலாம். சென்னைத் தமிழில் சொல்வது என்றால் 'முட்டுச் சந்து' உள்ளே போகிற காரும், வண்டிகளும் நேராக, அந்தத் தெரு முழுசையும் பக்கத்தையும். குறுக்காக அடைத்துக் கொண்டிருக்கும் ஒரு வீட்டில் போய்த்தான் முட்டவேண்டும். அந்த வீட்டை முட்டாமல் வண்டிகள் திரும்பவும் முடியாது. இந்த இலட்சணத்தில், அங்கே, ஒரு லாரியும், இரண்டு மூன்று 'டிரக்' வண்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

முகவரி தெரியாமல், மெயின்ரோட்டில் இருந்து வருபவர்களை, இங்கே கொண்டுவந்து. "இந்தா, முட்டு," என்பது மாதிரி, செயலற்றதாக்கும் வல்லமை, இந்தத் தெருவுக்கும் உண்டு. இந்தப் பகுதி மக்களுக்கும் உண்டு. "செல்லும் செல்லாததுக்கு செட்டியார்" என்பதுபோல், முகவரியில் உள்ள தெருவின் விவரம் தெரியாமலும், அதேசமயம் விவரம் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளும் மனப்பான்மையுடனும், கேட்பவரிடம், "லெப்ட்ல கட் பண்ணி... ரைட்ல திரும்பி... அப்புறம் சீரா போய். ரைட்ல திரும்பி..." என்று சொல்பவர் சொன்னதும், அப்படிக் கேட்டுத் தொலைத்தவர்கள். இறுதியில் இங்கே வந்து தங்களைத் தாங்களே தொலைத்தவர்கள்போல், தடுமாறியதும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/23&oldid=1133667" இலிருந்து மீள்விக்கப்பட்டது