பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

வளர்ப்பு மகள்

என்றாலும். எப்போதும் கலகலப்புக்குப் பெயர் போன அந்த-அதாவது. அந்த முனுசாமித் தோட்டத்தின் மூன்றாவது சந்து. இப்போது கலகலப்பான கலகலப்புடன் காட்சியளித்தது. குறுக்கே மறித்து நின்ற அந்த வீட்டின் வாசலில், மாவிலைத் தோரணம் கட்டப்பட்டு இருந்தது. வாழைவிலை அதிகம். வாங்கி, கட்டப்படவில்லை ஒலி பெருக்கியில், "ஓரம் போ.. ஓரம் போ" என்று பாடல் ஒலித்தது. எந்த ஒரத்திலும் இடம் இல்லாத அளவுக்கு அளவுக்கு மீறிய மக்கள் நெரிசல், மணமகளின் தந்தையும் சொக்கலிங்கத்தின் தங்கை கணவனுமான பெருமாளும், எதைச் சம்பாதிக்கவில்லையானாலும். நண்பர்களைச் சம்பாதித்து, தானும் அவர்களின் தோழமைச் சம்பாதனைக்கு உட்பட்டவர்போல் தோன்றியது.

மணமேடையில் மணமக்கள், ஒருவரையொருவர் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டார்கள். சுற்றி நின்றவர்கள், ஏதாவது சத்தங்கேட்டு, வேறுபக்கமாகத் திரும்பும்போதெல்லாம். இவர்கள் தைரியமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மணமகன் பேசக் கூடப் போனான். மணமேடைக்கு முன்னால், இவர்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்ப்பதற்காகவே, சினிமாவை 'தியாகம்' செய்துவிட்டு அங்கே, முட்டிக்கால் போட்டு அமர்ந்திருந்த 'ரெண்டுங்கெட்டான்' வயதுப் பயல்கள் சிரித்துக் கொண்டார்கள்.

கெட்டிமேளம் முழங்கியது. வெற்றிலை, தேங்காய் வகையறாக்களுக்கு மேலே இருந்த தாலியை சுமந்த ஒரு தாம்பளத் தட்டை எடுத்துக் கொண்ட பெருமாள் கூட்டத்தினருக்கு இடையே போய், அவர்களின் ஆசீர்வாதத்தை பூச்சொறிதல் மூலம் பெற்றுக் கொண்டு மணமேடைக்கு வந்தார். உடனே மாப்பிள்ளையின் சகோதரி ஒருத்தி அந்தத் தாலியை வாங்கி மணமகனின் கையில் திணித்து. அந்தக் கையை மணமகளின் கழுத்தை நோக்கி ஒப்புக்கு உரசிவிட்டு பின்னர் அவளே தாலிக்கு முடிச்சு போட்டாள்.

அது ஒரு 'சீர்திருத்த'க் கல்யாணம். அய்யர். அமாவாசை கிடையாது. அக்கினி குண்ட வகையறாக்களும் இல்லை. ஆனாலும். ராகுகாலம், எமகண்டம் பார்த்து. பக்குவமான சமயத்தில் நடத்தப்பட்ட திருமணம் அப்படியும் ஆகாமல், இப்படியும் ஆக முடியாமல்போன ஒரு 'கலப்படக்' கல்யாணம். இந்தக் கல்யாணத்திற்குப் பெயர் 'வாழ்க்கை ஒப்பந்தம்', ஆனாலும் தாலி கட்ட மறக்காத ரெண்டுங்கெட்டான் கல்யாணம், நெல்லை மாவட்டத்தில், அருகருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஐயாயிரம்பேர் குடியிருக்கும் இந்த சென்னைப் பகுதியில். இப்படிப்பட்ட கல்யாணங்கள்தான் நடக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/24&oldid=1133668" இலிருந்து மீள்விக்கப்பட்டது