பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

15

செய்யப்பட்டது. அவரது பேச்சு, பாதியில் கோவிந்தா! இன்னும் பேச இருந்த பத்துப் பேர்வழியினர் அடியோடு கோவிந்தா.

பேச வேண்டியவர்கள் தவிர. மற்றவர்கள் நிம்மதிப் பெருமூச்சை விட்டபோது. சொக்கலிங்கம் மனைவியிடம் வந்து "சரி... நான் டாக்சியில் போறேன். செட்டியார் காத்திருப்பார். நீங்கள் சாவகாசமா சாப்பிட்டுவிட்டு, கார்ல வாங்க" என்று சொல்லிக்கொண்டே, சட்டைப் பித்தானைப் பூட்டினார். புறப்படுகிறாராம்.

மல்லிகாவும் எழுந்தாள்.

"நானும் வரேம்பா. எனக்கு போரடிக்குது. நாளைக்கு காலேஜ்ல டெஸ்ட் இருக்கு. ப்ளீஸ்... நானும்..."

சொக்கலிங்கம், சிறிது யோசித்துவிட்டு, அப்புறம் யோசிக்காமலே பேசினார்.

"என்னம்மா நீ, சின்னப்பிள்ளை மாதிரி பேசுற? நாலுபேரு என்ன நினைப்பாங்க? அம்மா, அப்பாவோட கொஞ்ச நேரம் பேசிட்டு, அப்புறமா வா. நீ செய்யுறது தப்பு. அவங்கதான் உன்னைப் பெத்தவங்க. உன்னைப் பார்த்து, அவங்க மனசு குளிரணும்; கொதிக்கப்படாது. பார்வதி, நான் வரட்டுமா? இவள் அவசரப்படுத்துறாள்னு நீயும் அவசரமாய் வந்துடாதே. நகை பத்திரம். எவனாவது கத்தரி போட்டுடப் போறான்..."

சொக்கலிங்கம் போய்விட்டார்.

மல்லிகாவிற்கு லேசாகக் கண்ணீர்கூட வந்தது. எவ்வளவு நேரம் இந்த வீட்டில் இருப்பது? ஒரே புழுக்கம்... ஒரே வாடை... ஒரே எரிச்சல்... சீச்சீ...

மல்லிகாவும், பார்வதியுடன் பந்தியில் உட்கார்ந்தாள். அவளால் சாப்பிட முடியவில்லை . இந்நேரம், தியாகராய நகர் வீட்டில், இடியாப்பம்-குருமா சாப்பிட்டு இருப்பாள்! மிக்சியில் ஆரஞ்சுப் பழங்களையோ அன்னாசிப் பழங்களையோ பிழிந்து ஒரு கிளாஸ் சாறு குடித்து இருப்பாள். சாப்பாடா இது? உருளைக்கிழங்கு அளவிற்கு அரிசி! அதுவும் பாதி வேகாத அரிசி. காம்பு போகாத கத்தரிக்காய்-பொறியலாம்... ரசமாம்... சரியான குழாய்த் தண்ணீர்.

மல்லிகாவால் சாப்பிட முடியவில்லை. பார்வதி, சாப்பிடுவதுபோல் பாசாங்கு செய்துகொண்டும். மற்ற பந்தி ரசிகர்கள் முந்தியடித்து. ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டும் இருந்தபோது, மல்லிகா அத்தனை பேரின் கண்களும் தன்னை மொய்க்கும்படியாக எழுந்தாள். அவள் அம்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/29&oldid=1133675" இலிருந்து மீள்விக்கப்பட்டது