பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

19

நினைப்பாங்களேன்னு கூட்டி வந்தேன். கடைசில, நாலு பேரு முன்னாலேயே அவளை அவமானப் படுத்திட்டிங்க..." என்று சொல்லிக்கொண்டே காருக்குள் வந்து, மல்லிகாவை தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டாள். "காரை எடு தம்பி. இந்த இடத்துக்கு வாரது இதுதான் கடைசித் தடவை..." என்று அவள் கத்த. கார். கத்திக்கொண்டே ஓடியது.

நடைவாசலில் நின்று, நடப்பதை நம்பாதவர்கள் போல் கவனித்துக்கொண்டு இருந்த செல்லம்மாவும், அவள் பெண்டு பிள்ளைகளும், கட்சி பிரிந்து விவகாரத்தை வாதாடப் போனார்கள். இதற்குள் குழாய்ப் பக்கமாக நின்ற பெருமாள் அங்கே வந்து, "எல்லாம் உன்னால வந்த கோளாறுடி, தத்து கொடுக்காதடி... கொடுக்காதடின்னு எவ்வளவோ தடவை சொன்னேன். நீதான் கேட்கல. இப்போ நான் பெத்த மகளே. ஏன் பெத்தோம் என்கிறது மாதிரி நடந்துக்கிறாள். இனிமேல், மகளைப் பார்க்கப் போறோம்னு போ... அப்புறம் பாரு வேடிக்கையை. ஒரு கையையாவது, காலையாவது ஒடிக்காட்டால் 'என்னடா நாயே'ன்னு கேளு..." என்றார்.

தொலைவில் போன காரையே செல்லம்மா வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தாள். கணவனைப் பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். மீறிப்போனால், சொன்னபடி செய்யக்கூடிய அரிச்சந்திரன், அவர்.

செல்லம்மா மனதுக்குள்ளே புலம்பினாள்.

'நான் பெற்ற என் செல்ல மகளோட பழகத்தான் முடியல. இனிமேல் பார்க்கவும் முடியாதோ? கண்ணை, கண்ணே பார்க்க முடியாதது மாதிரி, இனிமேல், என் கண்ணாட்டியை என் கண்ணால பார்க்கக்கூட முடியாதோ... முடியாதோ...'

அன்னம்மா. எதேச்சையாக பெற்ற வயிரைப் பிடித்துக் கொண்டாள். அவளுக்கு தலை சுற்றாமலேயே சுற்றியது- புறமாக அல்ல... உள்ளுக்குள்... தலைக்குள் இருந்த மூளையும். எலும்பும். நரம்புகளும் முரண்பட்டுப் போனது போன்ற உளைச்சல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/33&oldid=1133679" இலிருந்து மீள்விக்கப்பட்டது