பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

27

"மல்லிகா, அதுக்கு இடம் கொடுக்க மாட்டா. நல்ல பொண்ணு. என்மேல் உயிரையே வச்சிருக்காள். ஏண்ணா சிரிக்கிங்க?"

"தான் பெறணும் பிள்ளை. தன்னோட பிறக்கணும் பிறவி என்கிறது பழமொழி. ஆயிரம் பிள்ளைகள எடுத்து வளர்த்தாலும், ஒரு சொந்தப் பிள்ளைக்கு இணையாகுமா?"

"அதுக்குத்தான் எனக்குக் கொடுத்து வைக்கலியே..."

"கொடுத்து வைக்கலன்னு சொன்ன பிறகு... கெடுத்து வைக்காமலாவது இருக்கணுமில்லையா? நம் சொத்தை நாமே கட்டிக் காப்பாத்தணும் இல்லியா... பெருமாள்கிட்ட மாட்டி, செக்குமாடு, சமாச்சாரமாய் ஆகி, சொத்து போயிடக் கூடாதே."

"அப்படியெல்லாம் ஆகாதுண்ணா. மல்லிகா சொத்துக்கு ஆசைப்படுகிறவள் இல்ல... நேத்து, கல்யாணத்துக்குப் போகும்போதுகூட நகைங்களை போடமாட்டேன்னுட்டாள்."

"அப்படி நீதான் நினைக்கிற, நீ அவளை அருமை பெருமையாய் வளர்க்கிறது, பிறத்தியாருக்குத் தெரியக்கூடாது என்கிறதுக்காக அப்படிச் செய்திருக்கலாம் இல்லியா. சும்மா பேச்சுக்குத்தான் சொல்றேன். ஒரு வாரத்துக்கு முன்னால, செல்லம்மா, 'கல்யாணப் பெண்ணுக்கு போட்டுட்டு, கழட்டித் தாரேன்னு சொல்லி இவளோட நகையைக் கேட்டாள். நீ முடியாதுன்னு சொன்னே. இந்த மல்லிகா, ஒரு வார்த்தை, உன்னோட சேர்ந்து முடியாதுன்னு சொன்னாளா? பீரோ நகைகள சொந்த அம்மாகிட்ட எடுத்துக் குடுக்கலியா, கடைசில அவள் நல்லவளாயும்... நீ பொல்லாதவளாயும் ஆகிப்போச்சு. 'உங்களுக்கு ஒண்ணுந் தெரியாதும்மா'ன்னு அவள் அடிக்கடி சொல்றத நீ தாராளமா நினைக்கிற... எனக்கு அப்படிப் படல..."

"இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியாது போலிருக்கே..."

"இதுதான் உண்மை... யாரையும் நம்பக்கூடாது. என்னைக்கூட நம்பக்கூடாது. மச்சான்கூட... ஒரு பவுன் மோதிரம் வாங்குனாரு மல்லிகாவைக் கூட்டிக்கிட்டுப் போய். கடை கடையாய் அலைந்து. இந்த மோதிரத்தைத் தேர்ந்தெடுத்திருக்காங்க... அவரோ... இல்ல இந்த மல்லிகாவோ... ஒரு வார்த்தை சொன்னாங்களா.. எதுக்காக இந்த மூடுமந்திர வேலைன்னு கேக்குறேன். மல்லிகா எனக்கு என்னமோ. பசப்புக்காரியா தெரியுது."

"எனக்கு தலை குழம்புதுண்ணா... வேற விஷயத்தைப் பேசலாம். காபி போடட்டுமா, டீ போடட்டுமா..?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/41&oldid=1133689" இலிருந்து மீள்விக்கப்பட்டது