பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

33

அங்கீகரிக்கவில்லை. ஆனால், அவன் 'சித்தப்பா... சித்தப்பா..." என்று செல்லமாகச் சொல்லிக்கொண்டே அவர் கொண்டுவரும் டிரம்களையும், தகர டப்பாக்களையும் எடுத்து. வீட்டிற்குள் வைத்தபோது, சொக்கலிங்கம் அவனை விரும்பவில்லையானாலும், வெறுக்காமல் இருந்தார்.

ஒருசமயம் அவர் அரவை மில்லில் ஏதோ கலாட்டா, மிளகாயைச் சரியாக அரைக்கவில்லை என்று ஒரு பட்டாக் கத்தி மைனர் சொக்கலிங்கத்தை மிரட்டினான். பயந்துபோன சொக்கலிங்கம். அவனிடம் வாங்கிய காசைத் திருப்பிக் கொடுத்தார்.

பட்டாக்கத்திக்கு மேலும் காசு கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டது. "என்னோட மிளகாயை கஸ்மாலமா பண்ணிட்டே அதுக்கு 'மாலு' வெட்டுறியா... இல்லே மவனே... குடல உருவட்டுமா... நம்மகிட்டயா டபாய்க்கிற நய்னா..." என்று சொன்னது. சொக்கலிங்கத்திற்கு அதிகபட்சமாகத் தெரிந்தது. "செய்யுறதைச் செய்டா" என்றார். அவனும் செய்ய வேண்டியதைச் செய்தான். அவரது சட்டைக் காலரைப் பிடித்துக்கொண்டு, "இன்னாய்யா சொன்னே... விட்டேன்னா ஒரு குத்து" என்று, எச்சில் துளிகளில் சாராயத் துளிகள் தெறிக்கும்படி கத்தியபோது, எதேச்சையாக அந்தப் பக்கமாக வந்த ராமன், விட்டான் ஒரு குத்து, பட்டாக்கத்தி சுருண்டு விழுந்தான். விழுந்தவன் எழுந்திருக்குமுன்னால், விட்டான் ஒரு உதை. பட்டாக்கத்தி படுத்துக்கொண்டே, "விட்டுடு வாத்தியாரே... இவரு... உன்னோட தோஸ்துன்னு தெரியாமப் பூட்டு... அப்பா விட்டுடு... அம்மா விட்டுடு" என்று புரண்டு கொண்டே புலம்பினான்.

"அவரு என்னோட தோஸ்து இல்லடா... சொந்தமான சின்ன நய்னாடா... அவருகிட்ட மன்னாப்புக் கேள்டா கயிதே..." என்று ராமன் கழுதை மாதிரி கனைத்து, ஆள்காட்டி விரலால், சித்தப்பாவைச் சுட்டிக் காட்டியபோது, அந்த 'கயிதே'யும் சொக்கலிங்கத்தின் கையிலும், காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்டுவிட்டு. திரும்பிப் பாராமல் ஓடியது.

சொக்கலிங்கத்திற்குப் பெருமை பிடிபடவில்லை. அந்தத் தெருவுக்கே எஜமானனாகவும். திண்ணைப் பொறுக்கியாகவும் வாழும் ஆனானப்பட்ட பட்டாக்கத்தியையே. இந்த ராமன் அடக்கிவிட்டான் என்றால். இவன் சாதாரண ராமன் அல்ல. ரவுடி ராமன். இவன் நமக்கு எப்போதும் தேவை!

அந்த நன்றிப் பெருக்கில், அவனுக்கு தன் வீட்டுக்குள் சகல உரிமைகளையும் கொடுத்தார் சொக்கலிங்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/47&oldid=1133699" இலிருந்து மீள்விக்கப்பட்டது