பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

35

பையன் ஒருவனை அனுப்பி நிச்சயப்படுத்திக் கொண்ட சொக்கலிங்கம் உள்ளே வந்தார்.

அந்தச் சமயத்தில், மல்லிகாவும் கல்லூரியில் இருந்து வந்தாள். வந்தவுடனேயே, அப்பாவின் கைகளைப் பிடித்துக்கொண்டே, "அப்பா... சபையர் தியேட்டரில் ஒரு நல்ல ஆங்கிலப் படம் வந்திருக்கு. என்னை கூட்டிக்கொண்டு காட்டுங்களேன்" என்று செல்லமாகச் சிணுங்கினாள்.

"நாளைக்குப் போகலாண்டா” என்று தனக்கு அவள் ஆண்பிள்ளை என்பதுபோல் சொக்கலிங்கம் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

பார்வதிக்குப் பற்றி எரிந்தது. காக்கா பிடிக்கிறாளோ.. அப்பாவைக் கையில் போட்டுக்கிட்டு, ராமனை கட்டமாட்டேன்னு சொல்லி விடுவாளோ... கடைசியில், அந்த குடிகாரன் பெருமாள்கிட்ட அவஸ்தைப்பட வேண்டியதிருக்குமோ. இதுக்கெல்லாம் யார் காரணம். இவள்தான்... இவளே தான்...

கணவன், காது கேட்காத தூரத்திற்குப் போய்விட்டார் என்பதை, வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்து உறுதி செய்துகொண்ட பார்வதி, அங்கிருந்தபடியே, "பொம்புளன்னா... ஒரு அடக்கம் வேணும். இங்கிலீஷ் படம் பார்க்கப் போறாளாம்... எல்லாம் அவர் கொடுக்கிற செல்லம். கொடுப்பாரைக் கண்டால், பேயிகூட குழஞ்சி குழஞ்சி ஆடுமாம்" என்று தள்பாட்டுக்குச் சொல்லிக்கொண்டே, சமையலறையைப் பார்த்துப் போனாள். இப்படிப் பேசினாலும், மல்லிகாவிற்கு டிபன் கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதை விரும்பாதவள்போல.

இப்படி, பாசத்தைக் கொட்டிக்கொண்டே, தன்னையும் 'கொட்டுவதை' உணர்ந்த மல்லிகாவால், அவளை அம்மா இல்லை என்று உதறவும் முடியவில்லை. அம்மாதான் என்று ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை. தனக்குள்ளேயே, சமாதானம் செய்துகொண்டாள். பெத்த பொண்ணுங்கள அவங்க அம்மாக்கள் எப்படித் திட்டுறாங்க. சிலசமயம் அடிக்கக்கூடச் செய்றங்களே... இந்த அம்மா அப்படி இல்ல. நான் ஆங்கிலப்படம் பார்த்து, குச்சிக்களியா மாறிடக் கூடாதுன்னு நிஜமாகவே பயப்படுறாங்க... இதுல தப்பில்ல...

என்றாலும் மல்லிகா அந்நியப்பட்டவள் போல் உணர்ந்தாள். அப்பாவிடம் கூட. அவளால் முன்பு பழகியது மாதிரி பழக முடியவில்லை. அவரிடம் பேசும்போதெல்லாம், அம்மாக்காரி கண்களை உருட்டுவதுபோல் அவளுக்குத் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/49&oldid=1133702" இலிருந்து மீள்விக்கப்பட்டது