பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

வளர்ப்பு மகள்

முறைக்கிறானா... படிப்பு... இந்தக் காலத்தில் தண்ணி பட்டபாடு. மரியாதை கிடையாது."

"அதிகமாய் குடிக்கானடி"

"இப்போ நாட்டுல எவன் குடிக்கல? குடிக்கிறது என்ன... பெரிய பாவமா? நான்கூட ஜூரத்துல துடிக்கையில... எங்க டாக்டர் சொன்னார்னு, இரண்டு ஸ்பூன் விஸ்கியையோ, கிஸ்கியையோ நீங்க எனக்கு கொடுக்கலியா? அதோட இப்போ கொஞ்சம் கொஞ்சமாய் குடிக்கிறதை விட்டுக்கிட்டு வாரான். கொஞ்சம் நஞ்சம் இருக்கிற பழக்கத்தையும், மல்லிகாவைக் கட்டுனதும் மறந்துடுவான். அவளும் அவனைத் திருத்திடுவாள்."

"அவள்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்."

"நாம வளர்த்த பொண்ணு நம்மை மீறிப் போவாளா? ஒரு தடவை, ஒரு கிழவர் 'யாரையாவது காதலிக்கியாமா' என்று கேட்டதுக்கு 'காதலாவது... கீதலாவது... அப்பா எவனையாவது காட்டி கட்டுன்னால் கட்டுவேன். வெட்டுன்னால் வெட்டுவேன்னு' அவள் சொன்னது ஞாபகம் இருக்கா?"

"எதுக்கும் நானே ஒரு வார்த்தை..."

"நீங்க கேட்க வேண்டாம். வெட்கப்படுவாள். நானே கேக்கிறேன். அப்புறம் அவள் இஷ்டம்."

"சரி, எனக்கு மூளை குழம்புது. நாலையும் யோசித்து, நீயே ஒரு முடிவுக்கு வா... எனக்கு நீங்க எல்லாரும் நல்லா சந்தோஷமாய் இருக்கணுங்கிறதுதான்."

"நீங்க நினைக்கிறது மாதிரியே நடக்கும்."

பார்வதி ஆனந்தப் பரவசமாக வெளியே வந்தாள். அப்போது, அத்தானைப் பார்க்க அங்கே வந்த இரண்டாவது அண்ணன் சுப்பையாவிடம் "அவரு... ராமனுக்கு, மல்லிகாவை கொடுக்கச் சம்மதிச்சிட்டாரு. பெரியண்ணன் போட்ட குறி பலிச்சிட்டு" என்றாள்.

சுப்பையா வெளியே ஓடினார். பெரியண்ணன் போட்ட குறி பலித்தால், இவர் எப்படி பெரிய மனிதனாவது? அவர் பொறுப்பில் கல்யாணம் நடக்க வேண்டாமா? அவரை 'குள்ளப் பயலே' என்று சொல்லி அடிக்கப்போன ராமனுக்கா, மல்லிகா? கூடாதுய்யா கூடாது.

சுப்பையா ஓடினார். பெருமாள் வீட்டைப் பார்த்து ஓடினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/52&oldid=1133707" இலிருந்து மீள்விக்கப்பட்டது