பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வளர்ப்பு மகள்

வேண்டாம்மா... வர வர... காபி குடிச்சால் வாந்தி வந்துடுது. இருந்தாலும், ராமனுக்குக் கொடுக்கிறதுன்னா..."

"ஏன் இன்னா போடுறீங்க, அவனுக்கு என்ன குறைச்சல்?"

"உனக்கே தெரியும். இவள் படித்தவள். அவன் படிக்கல. படிக்காட்டியும் பரவாயில்ல. குடிக்குறான். குடிச்சாலும் பரவாயில்ல. பட்டச் சாராயமா குடிக்கறான்."

"உங்க புருஷன் குடிக்காததையா இவன் குடிக்கான்?"

"என் நிலைமை. என் பொண்ணுக்கும் வரக் கூடாதுன்னுதான் உன்கிட்ட பிச்சை கேட்க வந்தேன். என் வீட்டுக்காரர் குடிச்சதும் அப்படியே படுத்துக்கிறார். ஆனால், உன் ராமன், குடிச்சிட்டு சோடா பாட்டில எடுக்கறான். இதுக்குள்ள மூணு தடவை... ஜெயிலுக்கு வேற..."

இதற்குப் பிறகும் பார்வதியால் மேற்கொண்டு கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. கழுத்தில் கிடந்த நெக்லசை, நைலக்ஸ் புடவையின் முந்தானை முனையால் துடைத்துக்கொண்டு, உள்ளத்து உணர்வுகளையும் அப்படியே துடைப்பவள்போல், வார்த்தைகளைப் பெருக்கிக்கொண்டே போனாள்.

"நீங்க காலங்காத்தால.. வந்ததை பார்த்தவுடனே நினைச்சேன். இந்தக் கல்யாணத்துல தலையிட உங்களுக்கு உரிமை கிடையாது. பிறந்ததுல இருந்து, வளர்ந்தது வரைக்கும் கவனிக்கிறவள் நான். பெத்துடுறது பெரிசல்ல. பெத்ததை வளர்க்கிறதுதான் பெரிசு, நாங்க யாருக்குக் கொடுத்தால் உங்களுக்கென்ன?"

"நான்... எதுக்கு சொல்றேன்னா..."

"நீங்க.. எதுவும் சொல்லவேண்டாம் அவள் என் வீட்ல இருக்கிற வரைக்கும் என் பொறுப்பு மல்லிகா உங்க பொண்ணு இல்லன்னு நான் சொல்லல. சொல்லவும் மாட்டேன். மகராசியா உங்க மகளை வேணுமுன்னா உங்க வீட்டுக்கே கூட்டிக்கிட்டுப் போய், எந்த அர்ச்சுன ராசதுரைக்கு வேணுமுன்னாலும் கொடுங்க. ஆனால் ஆத்துல ஒரு காலு சேத்துல ஒரு காலு கதை வேண்டாம் இப்பவே வேணுமுன்னாலும் கூட்டிக்கிட்டுப் போங்க இவள் பண்ற கூத்துக்கு நான் ஒருத்திதான் சரிக்கட்டிக்கிட்டுப் போகமுடியும்..."

செல்லம்மா, அண்ணன் இல்லாத சமயத்தில், அவன் மனைவியிடம் மாட்டிக் கொண்டதற்காக வருந்தினாள். மீளவேண்டும் என்று நினைத்தவள்போல். அண்ணன் வருகிறாரா என்று வெளியே பார்த்தாள். போகலாமா என்று அடியெடுக்கப் போனாள் ஆனால் பாழும் கால்கள் நகர மறுத்தன. பெற்ற மனம் பெயர மறுத்தது. அந்த நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/56&oldid=1133715" இலிருந்து மீள்விக்கப்பட்டது