பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

43

ராமனைக் கட்டியே சீதை படாத பாடுபட்டாள். இந்த ராமனை என் மவள் கட்டினால்? அட பகவானே. இதுக்கா அவளைப் பெத்தேன். இதுக்கா என் கிளியை, இவள்கிட்ட விட்டேன். இதுக்கா என் மாலையை... இவள் கையில் கொடுத்தேன். அட கடவுளே..."

செல்லம்மாவால் பேச முடியவில்லை. தொண்டை கட்டியது. கண்களும் கொட்டியது. விம்மல் சத்தம், வெடிச்சத்தம்போல் கேட்டதால், பார்வதியே சிறிதுநேரம் திகைத்துப் போனாள் பிறகு சமாளித்துக் கொண்டாள்.

"இந்தா பாருங்க... இந்த நீலி மாதிரி.. அழுகுற வேலை வேண்டாம். நான்தான் சொல்லிட்டேனே... மல்லி என் வீட்ல இருக்கிற வரைக்கும்... என் அக்கா மகன்தான் மாப்பிள்ளை. உங்களுக்கு கஷ்டமா இருந்தால் இப்பவே, இந்த கணமே அவளை பெட்டிப் படுக்கையோடு கூட்டிக்கிட்டுப் போகலாம். ஏய் மல்லி... ஏய்..."

செல்லம்மா, நாத்தனாரின் வாயைப் பொத்தினாள். ஏற்கெனவே ஏழு பிள்ளைகளோடு அவதிப் படுகிறவள். ஒருத்தி கரையேறி விட்டாள். இன்னொருத்தி கரையேற வேண்டும். பையன்களில் கடைசிப் பையன் படிக்கிறான். ஒருவன் மாமாவுடைய மளிகைக் கடையில் வேலை பார்க்கிறான். இன்னொருவன் வெட்டி கடைசியாக உள்ள பத்து வயது மகளும் ஏழு வயது மகளும் வீட்டில் இருபது குடித்தனங்கள் உள்ள காம்பவுண்டு வீட்டுக்குள், பத்தடி - ஐந்தடி பரப்பிற்குள் கக்கூஸ் பக்கம் உள்ள முதல் அறையில் குடியிருக்கும் அவளால் மல்லிகாவை அங்கே கொண்டு போக முடியாது. இரவில், அறைக்குள் படுத்தால் மூட்டைப் பூச்சியோடு, புழுக்கம். வெளியே படுத்தால் கொதிக்கும் தரை ஒன்று மாற்றி ஒன்றாக அழும் குழந்தைகள்.

"இந்த சகாரா சாகரத்துக்குள் மல்லிகாவால் இருக்க முடியாது. இருக்கவும் மாட்டாள். நாற்காலியில் உட்கார்ந்தவளால் கழிநீர் 'கால்வாய்' திட்டில் உட்கார முடியாது. மெத்தையில் படுப்பவளால், மேடை போல் இருக்கும் அடுப்புத் திட்டில் படுக்க முடியாது. மின்விசிறிக்குள் அமர்ந்து, தலைமுடி ஒயிலாக ஆடி அசைய. ஒய்யாரமாக இருக்கும் அவளால், ஒண்டிக் குடித்தனத்தில் கை விசிறிகூட இல்லாத புழுக்க லோகத்தில் புகமுடியாது. இவள் இங்கேயே இருக்கட்டும். இங்கேயே இருக்க வேண்டியவள். வேண்டியவளோ இல்லியோ... இருக்க வேண்டும், அட... மாரியாத்தா... ஏழையின் பிள்ளை பணக்காரப் பிள்ளையாய் வாழ்ந்தாலும் அது ஏழைதானோ? ஏழையின் பிள்ளை ஏழையாக இருந்தால்தான் நல்லதோ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/57&oldid=1133716" இலிருந்து மீள்விக்கப்பட்டது