பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

53

போய்க் கொண்டிருந்த சரவணனையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே வீட்டுக்கு வந்தாள்.

மல்லிகா வீட்டுள் நுழைந்தபோது. பார்வதியின் அண்ணன்மார்கள் இருவர் மச்சானோடு ஊஞ்சல் பலகையிலும், ஒருவர் சாய்வு நாற்காலியிலும் அமர்ந்திருந்தார்கள். ராமன் ஒரு ஓரமாக தூணில் சாய்ந்து கொண்டிருந்தான்.

மல்லிகாவிற்கு போன உயிர் திரும்பி வந்தது. சரவணனை இவ்வளவு சீக்கிரம் ராமன் அடித்திருக்க முடியாது...

மகளைப் பார்த்ததும், சொக்கலிங்கம் பதைத்துப் போனார். "ஆட்டோ ரிக்ஷாவை வரச்சொல்லி போன் பண்ணினால், என்னம்மா? இப்படியா. வெயிலில் வேர்க்க விறுவிறுக்க நடந்து வாரது?"

பார்வதியின் வாய் பல்லாக மாறியது.

"நான் ராமனை சைக்கிளில் அனுப்பி வச்சேன். இவள் பின்னால ஏறிக்க மாட்டேன்னு சொல்லி விட்டாளாம்."

ஊஞ்சல் பலகையில் இருந்த பெரிய மைத்துனர் ராமசாமி, இடிஇடியென சிரித்துக்கொண்டே பேசினார்.

'நீ என்ன பார்வதி... கல்யாணம் ஆகும் முன்னால், கட்டிக்கப் போறவனாய் இருந்தாலும் சைக்கிள்லே ஏறலாமா? மல்லிகா அப்படிப்பட்டவளாய் இருந்தால், உன் மகளை அவனுக்குக் கேட்பேனா? கல்யாணம் ஆகட்டும்... அப்புறம் பாரு அவள் ராமன் சைக்கிள்ல. பின்னால உட்கார மாட்டாள். முன்னால்தான் உட்காருவாள். இல்லியா மல்லிகா?"

'இல்லை. இல்லவே இல்லை என்று கத்தவேண்டும் போலிருந்தது மல்லிகாவுக்கு. ஆனால் அப்படிக் கத்தவில்லை. அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு. அப்பாவையும் இறங்கப் பார்த்துவிட்டு, தனது அறைக்குள் போனாள். தலை திடீரென்று கணத்தது. "நாளைக்கே வெத்திலைப் பாக்கு மாத்திடலாம்" என்று வெளியே கேட்ட பார்வதியின் சத்தம், அவளுக்குத் தன் தலையே வெடித்து. அப்படி ஒரு சத்தத்தை எழுப்புவதுபோல் தோன்றியது.

பேசாமல், அந்த ஆளோட வீட்டுக்குப் போயிடலாமா? அம்மாவோட 'நாத்தனார்', நல்லவங்கதானே. சீ... அங்கே... அந்த குண்டு குழி விழுந்த வீட்டுக்குள்ள. எப்படி இருக்க முடியும்? அப்பாவை விட்டுட்டு எப்படிப் பிரிஞ்சு இருக்க முடியும்? அதோட அந்த ஆளு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/67&oldid=1133728" இலிருந்து மீள்விக்கப்பட்டது