பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

வளர்ப்பு மகள்

செல்லம்மா, இன்னொரு தடவை சொல்லிவிட்டு, விஷயத்தை ஆதியோடு அந்தமாக விளக்கிவிட்டு. நாத்தனார்க்காரியிடம் போய் தான் மன்றாடியதையும். அவள் தன்னை உதாசீனப் படுத்தியதையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டு. "செத்தாலும், வாழ்ந்தாலும் நம்மோடயே அவள் சாகட்டும். போய் மகளைக் கூட்டிக்கொண்டு வாங்க" என்றாள்.

செல்லம்மா எதிர்பார்த்ததுபோல். பெருமாள் கோபப்படவில்லை. அடிக்க வரவில்லை. பித்துப் பிடித்தவர்போல் அப்படியே தலையில் கை வைத்தபடி 'குத்துக்கால்' போட்டு அதிர்ந்துபோய் உட்கார்ந்திருந்தார்.

'என்னை, பாசத்தோடு பார்க்காதவள் படட்டும்' என்று பழிவாங்கும் நெஞ்சத்தோடு கணவன் மதர்ப்பாக உட்கார்ந்திருக்கிறாரோ என்றுகூட செல்லம்மா நினைத்தாள். "உடனே நீங்கள் போய் கூட்டி வாறீங்களா... நான் போகட்டுமா? எல்லாம் என் தலைவிதி. நீங்க சொன்னதை நான் அப்பவே கேட்டிருந்தால், இப்படி வந்திருக்காது" என்று முனங்கினாள்.

அப்போது, செல்லம்மா எதிர்பாராத ஒன்று நடந்தது. பெருமாளின் கண்களில் நீர் முட்டியது.

"என்னங்க இப்படி?" என்று செல்லம்மா அவர் கையைப் பிடித்ததும், அவரால் தாள முடியவில்லை. கேவிக் கேவி அழுதார். மனைவியின் கழுத்தில் முகம் புதைத்து, "என் பெண்ணுக்கா இந்த கதி. என் பெண்ணுக்கா" என்று அவர் புலம்பிய சத்தம் கேட்டு, குடித்தனக்காரர்கள் அங்கே கூடிவிட்டார்கள். சில்லறை விஷயங்களில் கவனம் செலுத்துவதைக் கவுரவக் குறைச்சலாகக் கருதும் 'வீட்டுக்கார அம்மா'கூட மேல்மாடி பால்கனியில் நின்று எட்டிப் பார்த்தாள். பிள்ளைகள் அங்கே, "அப்பா. அப்பா" என்று சொல்லிக்கொண்டே கூடினார்கள். இதுவரை அழவைத்த அப்பா. இப்போது அழுவதைப் பார்த்ததும். ஏதோ பயங்கரமான ஒன்று நடந்திருக்கும் என்பதைப் பாவித்துக் கொண்ட பிள்ளைகள். ஆளுக்கொரு பக்கமாகப் புலம்பினார்கள். அதைரியப்பட்ட செல்லம்மாவே இப்போது, அவருக்கு தைரியம் சொன்னாள்.

"என்னங்க சின்னப் பிள்ளை மாதிரி. நம்ம பொண்ணு நம்மகிட்ட வாரதுக்கு சந்தோசப்படுறதை விட்டுப்புட்டு..."

பெருமாள், அவள் குரலை மேலும் பலமாக அழுது தடுத்தார். பின்னர் கேவிக்கொண்டே "நீயும் புரிஞ்சிக்காம இருக்கியேடி விதம் ஒரு புடவை கட்டி, தினம் ஒருவகை சாப்பாடு சாப்பிட்டு வாழ்ற என் ராஜகுமாரியால. இந்த வீட்டுக்குள்ள எப்படி இருக்க முடியும்? அய்யோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/70&oldid=1133731" இலிருந்து மீள்விக்கப்பட்டது