பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

வளர்ப்பு மகள்

கற்றையோடு மோதி. முதுகு வழியாக இறங்கியபோது அவளுக்கு ஓரளவு இதமாக இருந்தது. அதேசமயம் ராமன், சரவணன் இரண்டு அம்மாக்கள், இரண்டு அப்பாக்கள் மாறி மாறி வந்து போனார்கள். தெருப் பொறுக்கியாக வாழும் ராமனை அவளால் கட்டிக்க முடியாது. அப்படி கட்டாமல் அந்த வீட்டில் அவளால் இருக்கவும் முடியாது. இருந்தாலும், முகமறியாப் பருவத்திலேயே பார்த்துப் பழகிய, இந்த அப்பாவையும் அம்மாவையும் விட்டுவிட்டு அவளால் பிரிந்திருக்க முடியாது.

மல்லிகா சிந்தித்து சிந்தித்து சிந்தனையே இல்லாமல் போனாள். இந்த ராமன் இல்லாமலே இந்த அம்மாவுடனும் இந்த அப்பாவுடனும் வாழணும். எப்படி? எப்படி?

அவள் ஒரு தீர்மானமான முடிவுக்கும் வந்துவிட்டாள். ராமனைக் கட்டிக்க முடியாது என்று அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்லவேண்டும்.

குளித்துவிட்டு, பீரோவில் இருந்த புதுப்புடவையைக் கட்டாமல் உடுத்திய புடவையையே கட்டிக்கொண்டு சமையல் அறைக்குள் நின்ற பார்வதியின் பக்கம் வந்தாள். "அம்மா’ என்றாள் குழைந்தும் இழைந்தும்.

பார்வதி. அவளை வினா நெற்றியோடு பார்த்தபோது, மல்லிகா தயங்கித் தயங்கி, தத்திக் கொண்டே பேசினாள்:

எனக்கு ராமன் வேண்டாம்மா... வேண்டாம்மா..."

மல்லிகாவால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. அம்மாவின் மார்பில் தலை வைக்கப் போனாள். அதற்குள் அவள் முகம் போன போக்கிற்கும். சிவந்த கண்களுக்கும் பயந்துபோய் சுவரில் முகம் புதைத்து அழுதாள்.

நடித்துப் பழகிய பெரிய அண்ணனின் சகவாச தோசத்தால், மல்லிகாவின் அழுகையையும் ஒரு நடிப்பாகக் கருதி ஒரு நடிப்புக்காகக்கூட ஆறுதலாகப் பேசாமல், பார்வதி பொறிந்தாள்.

"நீ எதுக்கு அழுவுறேன்னு எனக்குத் தெரியும். எவனோ ஒரு கஸ்மாலத்துக்கிட்ட இது ராமன் கடன் கொடுத்த வார்த்தை ரோட்டுல தளுக்கிப் பேசிக்கிட்டு நின்னதை, ராமன் சொன்னான். ரோட்டுல காதல்... வீட்டுல... இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்கிறது மாதிரி நடிக்கிறியாக்கும். எல்லாம் அவரு கொடுத்த இளக்காரம்."

மல்லிகாவிற்கும், லேசாகக் கோபம் வந்தது.

"எதுக்கும்மா வீண் பேச்சு? ராமனை என்னால் கட்டிக்க முடியாது அவ்வளவுதான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/72&oldid=1133733" இலிருந்து மீள்விக்கப்பட்டது