பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

59

"எதிர்த்துப் பேசுகிற அளவுக்கு வந்திட்டியா? எதிர்த்தாப் பேசுறே? இந்த வீட்டுல இருக்கணுமுன்னா ராமனைக் கட்டியாகணும். இல்லைன்னா. மரியாதையாய் உன் அப்பன் வீட்டைப் பார்த்துப் போ..."

மல்லிகா பெட்டிப் பாம்பாக அடங்கிப் போய் நின்றாள். அதேசமயம் அப்பாவிடம் வாதாடி, வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையோடும் இருந்தாள். எது நடந்தாலும் அம்மாவை விட்டு அவளால் பிரிந்திருக்க முடியாது. அப்பாவைப் பார்க்காமல் இருக்கவும் முடியாது. அதோடு அவளால் அந்த ஆள் வீட்டிற்குப் போய் இருக்கவும் முடியாது.

பார்வதி பேசினால் பேசிக்கொண்டே போகிறவள். அதுவும் 'எதிரி' பேச்சை நிறுத்திவிட்டால், எகிறிப் பேசக் கூடியவள், பேசினாள்.

"வாயைத் திறந்து சொல்லுடி. ராமனைக் கட்டிக்க முடியுமா? முடியாதா? ஏண்டி பேச மாட்டேங்கிறே? நீதான் சரியான கள்ளியாச்சே... உன் அம்மாவுக்கு இருக்கிற திமிரு உனக்கில்லாம போகுமா? போகுமான்னேன்? சரியான நரிக்குறத்தியாச்சே உன் அம்மா."

மல்லிகாவால் பேசாமல் இருக்க முடியவில்லை.

"உன் நாத்தனாரை அப்படிப் பேசாதேம்மா."

"இன்னுமாடி எதிர்த்துப் பேசறே? உன் அம்மாவைப் பேசினால் ரோஷம் வருதோ? அந்த மேனா மினுக்கியைப் பேசினால், கோபம் வருதோ? எச்சி இலைக்காரிக்குப் பிறந்தவளுக்கு எச்சிக்கலை புத்திதானே இருக்கும்?"

மல்லிகா கண்களை உருட்டிக்கொண்டே பார்வதியைப் பார்த்தாள். ஏதோ ஒரு உண்மை அவளுக்குத் தட்டுப்பட்டது. இவள் அம்மா இல்லை. ஆயிரம்தான் எடுத்து வளர்த்திருந்தாலும். இவள் அம்மாவாக மாட்டாள்... அம்மாவாக மாட்டாள்.

"என்னையாடி மொறைக்கிறே? உன் அம்மா புத்தி போகுமா?"

"எங்க அம்மாவை அப்படிப் பேசாதீங்க. அத்தை."

பார்வதி உச்சி முதல் உள்ளங்கால்வரை அதிர்ந்து போனாள். இதுவரை அவள் கேட்டறியாத வார்த்தை. இதுவரை அவளுக்குச் சொல்லிக் கொடுத்தும் சொல்ல மறுத்த வார்த்தை ஒரே வார்த்தையில் எத்தனை விஷயங்களைக் கொட்டிவிட்டாள்? அவளுக்கே தன்னை அவள். அம்மா என்று சொல்லாமல் போனதில் ஒரு ஆத்திரம் வளர்த்த பாசம் குலுக்கிய ஆத்திரம் அந்த ஆத்திரத்தை அவள் வார்த்தைகளாக்க நினைத்தபோது அருகாமையிலேயே ஒரு குரல் கம்பீரமாக ஒலித்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/73&oldid=1133734" இலிருந்து மீள்விக்கப்பட்டது