பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

63

ரிக்க்ஷா வந்து நின்றவுடனேயே, செல்லம்மாவின் கண்களில் நீர் கீழே விழுந்தது. மல்லிகாவை, முதுகோடு சேர்த்து அணைத்து. தன் கைகளாலேயே இறக்கிவிட்டு, பின்னர் அவளை அப்படியே கட்டிப் பிடித்துக்கொண்டு "என் ராசாத்தி... என் ராசாத்தி... வந்துட்டியாம்மா..." என்று கதறினாள்.

சத்தங்கேட்டு, அவளின் பையன்களும், பெண்களும் வந்தார்கள். பிரசவத்திற்காக வந்திருக்கும் அவள் மூத்த மகள் சந்திரா, தங்கையின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதாள். ஏழைகள், தங்களுக்கு இஷ்டப்பட்டவர் வேதனையில் வேகும்போது, தங்களால் செய்யக்கூடிய ஒன்று, அந்த வேதனையைப் பகிர்ந்துகொள்வது போல், அழத் தான் முடியும் என்பதுபோல், அத்தனைபேரும் அழுதார்கள். இதனால், தெருக்கூட்டம் அங்கே திரண்டு வந்தது. உள்ளே இருந்த இருபது குடித்தனக்காரர்களும். அங்கே குழுமினார்கள். 'டிக்னிட்டி' பார்க்கும் 'வீட்டுக்கார அம்மா' கூட தெருவுக்கே - அதுவும் நடுத் தெருவுக்கே வந்துவிட்டாள்.

பெருமாளுக்கு, என்னவோ போலிருந்தது. படித்த பெண் முன்னால இப்படியா, 'ரீசன்ட்' இல்லாமல் அழுவது? அவள் என்ன நினைப்பாள்? அதோடு, இந்தச் சமயத்தில் அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியவர்களே அழுதால்... அவர், வழக்கமாகக் கத்தாமல், படித்த மகளுக்கு மரியாதை கொடுப்பவர்போல், பேசினார்.

"நம்ம பொண்ணு... நம்மகிட்ட வந்திருக்காள். எங்கே வரணுமோ... அங்கே வந்துருக்காள். சந்தோசப் படாமல் அழுதால் எப்படி..."

மல்லிகா, அவர்களை நிமிர்ந்து பார்த்தாள். அவர்கள் அனைவரும், அவளுக்கு முன்பு பார்த்தறியாத புது மனிதர்களாகத் தெரிந்தார்கள். அந்த எலும்புக் கூடுகளுக்குள்ளும், இதயங்கள் இருப்பதை அவள் தேடாமலே கண்டாள். அக்காளின் தோளில் கைபோட்டுக் கொண்டு, அம்மாவின் கண்களை இடுப்பில் செருகியிருந்த தன் கைக்குட்டை எடுத்து துடைத்தாள்.

எப்படியோ, மல்லிகா, அந்த முட்டு வீட்டுக்குள் வந்து உட்கார்ந்தாள். அவள் அக்காள். அவள் உட்காருவதற்கு முன்பே, தனது கல்யாணப் புடவையை. நான்காக மடித்து. அடுப்புத் திட்டை ஒட்டியிருந்த மண்திட்டில் அதைப் போட்டு பரப்பிவிட்டு, தங்கையை உட்காரச் சொன்னாள். தம்பி ஒருவன். மல்லிகாவிற்கு வெளியே இருந்து வாங்கிக் கொண்டு வந்த ஒரு ஓலை விசிறியை எடுத்து வீசினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/77&oldid=1133739" இலிருந்து மீள்விக்கப்பட்டது