பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

வளர்ப்பு மகள்

"அம்மாவிடம் போகணும். அப்பாவைப் பார்க்கணும். இப்பவே பார்க்கணும்."

"இப்போ எப்படிம்மா முடியும்..."

"அப்பாவைப் பார்க்கணும்... அம்மாகிட்ட போகணும்..."

"இன்னைக்கு மட்டும் பொறும்மா..."

முடியாது. இப்பவே பார்க்கணும்..."

"கவலைப்படாதம்மா... நாளைக்கு... எப்பாடு பட்டாவது ஒரு கட்டில் வாங்கிடுறோம். ரெண்டு நாளையில்... மெத்தை வாங்கிடுறோம்..."

"அய்யோ... நான் கட்டில் மெத்தைக்காக.. அவங்களைப் பார்க்கணுமுன்னு சொல்லல... தெருவுல நின்றாவது நான், என் அப்பாவையும், அம்மாவையும் பார்க்கணும். பார்த்தே ஆகணும்... இப்பவே பார்க்கணும்..."

"இப்போ எப்படிம்மா முடியும்... நடு ராத்திரி..."

"பரவாயில்ல. பார்க்கணும்..."

"அது எப்படிம்மா..."

"அப்பா... அம்மா..."

"ஏம்மா அழுகிற?"

"அப்பா... அம்மா... வாங்கப்பப்பா... வாங்கம்மா.. என்னால அங்க வரமுடியல... நீங்களாவது வாங்க..."

"மல்லிகா... அம்மா சொல்றதக் கேளும்மா..."

"அப்பா... அம்மா... அம்மா... அப்பா..."

மல்லிகா போட்ட கூச்சல் அழுகையில், அப்போது அழுதுகொண்டிருந்த சின்னப் பிள்ளைகள், தாங்கள் அவளைவிட பெரிய பிள்ளைகள் என்பதுபோலவும், அவள், தங்களை பெரிய பிள்ளைகளாய் ஆக்கிவிட்டது போலவும், அதுகள் அழுகையை நிறுத்தியபோது, அவள் மேலும் பலமாக அழுதாள்.

"அப்பா... அம்மா... அப்பா.. என் அப்பா... என் அம்மா..."

எல்லோருமே, அங்கே கூடிவிட்டார்கள். வேறுவேறு வீடுகளில் இருந்தவர்கள்கூட வெளியே வந்து, நடைக்கதவைத் தட்டினார்கள் மல்லிகா. அழுகையை நிறுத்தவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/80&oldid=1133742" இலிருந்து மீள்விக்கப்பட்டது