பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வளர்ப்பு மகள்

முகத்தைக் கழுவுடி. ராமனுக்கு உன்னைக் கொடுக்க மாட்டோமுன்னு சொல்லி, கூட்டிக்கிட்டு வரலாம். கிளம்புடி..."

பார்வதி, பெருமூச்சு விட்டுக்கொண்டே எழுந்தாள். அவள் முகம் திடுக்கிடுவதைப் பார்த்து சொக்கலிங்கம். அந்த முகத்திற்கு எதிர்த் திசையைப் பார்த்தார். அவளின் மூத்த அண்ணன் ராமசாமி பல்லைக் கடித்துக்கொண்டு நின்றார். இருவரும், தன் பிரசன்னத்தைப் பார்த்துவிட்டார்கள் என்பது நிச்சயமானதும், வில்போல் கோணியிருந்த தன் வாய் வழியாக சொல்லம்புகளைத் தொடுத்தார்.

"ஏய்... பார்வதி அவருக்குத்தான் அறிவில்லை. உனக்குமா இல்லை? உங்க சொந்த மகளாய் இருந்தால் வாசல்படியைத் தாண்டுவாளா? சரி. போனதே போனாள், தோளோடு தோளாய் வளர்த்த மச்சான் கிட்ட சொல்லாமல் போவாளா? சரி, அப்படியே போகட்டும்; போற வழியில், இவருகிட்ட சொல்லிட்டுப் போகலாமில்ல? ஏன் போகல? எல்லாம் திட்டம், அப்பனும் அவளும் போட்டத் திட்டம். ஏதாவது சாக்குச் சொல்லி வெளியேறி, அப்புறம் வழக்குப்போட்டு, சொத்தைப் பிடுங்கி, என் தங்கச்சியை மொட்டையடிக்கணும் என்கிற திட்டம்."

சொக்கலிங்கம் மைத்துனரை உதாசீனப்படுத்துபவர்போல் மனைவியிடம், "சரி, நேரமாகுது. உன் அண்ணன் பிரசங்கத்தை அப்புறமாய் கேட்கலாம். இப்போ புறப்படு" என்றார்.

பார்வதி புருஷனையும் அண்ணனையும் மாறிமாறிப் பார்த்தாள். இடது காலை நகர்த்தாமல், வலது காலை மட்டும் நகர்த்தினாள். ராமசாமி உபதேசம் செய்பவர் போல் பேசினார்.

"எனக்கென்ன, போகணுமுன்னா போங்க. அங்கே போனதும், அந்த குடிகாரன் வாயில் வந்தபடி பேசப்போறான். அரிவாளத் தூக்கிக்கிட்டு இவரை வெட்டினாலும் வெட்டுவான். எனக்கென்ன. போயிட்டு வாங்க. உங்களுக்கெல்லாம் பட்டாத்தான் புத்தி வரும்..."

இப்போது சொக்கலிங்கம் தயங்கினார். தங்கையின் கணவர் அவரை நேருக்கு நேராக நின்று திட்டமாட்டார். இருந்தாலும் இவரு சொல்றது மாதிரி, அரிவாளை கிரிவாளைத் தூக்கினால்? இவளை மானபங்கமாய் பேசிவிட்டால்..?

சொக்கலிங்கத்தின் மனதில் உதித்த அச்சமும் சந்தேகமும் அவர் பேச்சில் நன்றாக ஒலித்தது.

"என்ன பார்வதி... போகலாமா. வேண்டாமா... சொல்லு"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/84&oldid=1133746" இலிருந்து மீள்விக்கப்பட்டது