பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

71

பார்வதி சொல்லுவதற்கு முன்னால், அண்ணனை நோக்கினாள்.

"என்னை ஏன் பார்க்கறே? போறதுன்னால் போ. ஆனால் ஒண்ணு. என்னை அண்ணன்னு சொல்லப்படாது. உன்னை தூசி மாதிரி நினைச்சிட்டுப் போனவளை நீ கூட்டிக்கிட்டு வந்தால், எங்களை தூசின்னு நினைச்சதா அர்த்தம். அவளை சேர்க்கிறதாய் இருந்தால், எங்களைத் தள்ளி வச்சிடு, அவள் இனிமேல் இந்த வீட்டுக்குள்ள கால் வச்சால், நாங்க கால் வைக்க மாட்டோம். அப்புறம் உனக்கும் எங்களுக்கும் ஒட்டும் கிடையாது; உறவும் கிடையாது. இவரு காலத்துக்குப் பிறகு, 'மல்லிகா திட்டினாள். அவள் அப்பன் அடிக்க வரான்'னு எங்ககிட்ட வந்து கண்ணைக் கசக்கக்கூடாது. நாங்க ஒண்னும் கேட்க மாட்டோம். உன் தலையிலே என்ன எழுதியிருக்கோ, அதை என்னால மாத்த முடியுமா? வேணுமுன்னால் போ..."

பார்வதி பயந்துவிட்டாள். தள்ளாத வயதில், மல்லிகா, தான் இப்போது அவளிடம் எப்படி நடந்து கொண்டாளோ அப்படி தன்னிடம் அவள் நடந்துகொள்வது போலவும், அம்மா என்று சொல்லாமல் அத்தை என்று சொல்வது போலவும், அவள் அப்பா பெருமாள், தன்னை 'நாயே பேயே'ன்னு திட்டுவது போலவும், அழுதுகொண்டு அண்ணன் வீட்டுக்குப் போனால் அங்கே கதவு சாத்தப்படுவது போலவும் கற்பனை செய்தாள். பயத்தில் அவள் உடலெல்லாம் ஆடியது. அண்ணனைப் பார்க்கும்போது, அதிகமாக ஆடியது. இறுதியில் திட்டவட்டமாகப் பேசினாள்.

"எங்க... அண்ணியைப் பார்த்துட்டு வாரேன்... அண்ணி... வீட்லதான அண்ணா இருக்காங்க."

ராமசாமி, 'பிளஸ்' மாதிரி தலையாட்டினார். பார்வதி புறப்பட்டாள். அண்ணியிடம் நடந்ததைச் சொல்லி அழவேண்டும் ராமசாமி, தங்கையுடன் போய்விட்டார்.

சொக்கலிங்கம், தனிமையில் தவித்தார். கடைக்குப் போக மனமில்லை. யாருக்காகச் சம்பாதிக்க வேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/85&oldid=1133747" இலிருந்து மீள்விக்கப்பட்டது