பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

வளர்ப்பு மகள்

யாரும் எதுவும் சொல்லவில்லை. பார்வதி பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டாள். சொக்கலிங்கம், 'முறைகெட்ட பயகிட்ட' என்ன பேச்சு என்பதுபோல் குப்புறப் படுத்தார்.

அப்படியும், ஒரு இளம் பெண்ணுடன், தன்னை இணைத்துக் கொள்ளும் இதயத் துடிப்பை, அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. நினைக்க நினைக்க, வயதான சொக்கலிங்கத்திற்குச் சுவையாக இருந்தது.


17

ஒரு வாரம் செத்து, மறுவாரம் பிறந்தது.

எந்த நிலைக்கு ஒருவர் வந்தாலும், அந்த நிலைக்கு ஏற்ப ஐம்புலன்களும் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்கின்றன என்ற தத்துவத்தை அல்லது விஞ்ஞான உண்மையை, மல்லிகா நம்பத் துவங்கினாளோ இல்லையோ, உணரத் துவங்கினாள்.

அந்தச் சூழல், அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், வெறுக்கவில்லை. ஆதரிக்க முடியவில்லை என்றாலும், அனுசரிக்க முடிகிறது. அவள் வந்த நான்கைந்து நாட்கள் வரை, செல்லம்மா மகளுக்குப் பிடித்தமான இடியாப்பத்தையும், ரவா தோசையையும், தினந்தோறும் ஒரு உடுப்பி ஓட்டலில் இருந்து வாங்கிக் கொடுத்தாள். பிறகு கையில் காசில்லாததால், அந்த வீட்டின் திண்ணையிலேயே, இட்லி கடை போட்டிருந்த ஒரு ஆயாவிடம், கல்லைவிடக் கடினமான, பல்லை உடைக்கும் இட்லிகளை, அவளுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டு, இரண்டு கைகளையும் பின்பக்கமாய் வளைத்துப் போட்டு, பின்னிக்கொண்டு ஒன்றோடொன்று மோதிய தாய்மையையும், இயலாமையையும் இணைக்க முயற்சித்தாள். அவை இணைபட முடியாமல் போகவே, வாசல்படியில் சாய்ந்து, வெளிக்கூரையை பற்றற்ற யோகிபோல் உற்றுப் பார்த்தாள்.

மல்லிகா புரிந்துகொண்டாள். மறுநாள், அம்மா இட்லி வாங்கக்கூட காசில்லாமல், தன் மூத்த மகள் சந்திராவிடம் "உன்கிட்ட ஏதாவது..." என்று இழுத்தபோது மல்லிகா ஒரு ஈயத்தட்டை எடுத்து, பழைய பானையைத் திறந்து, பழைய கஞ்சியை போட்டு சிரித்துக்கொண்டே ஒரு வெங்காயத்தைக் கடித்துச் சாப்பிட்டாள். செல்லம்மாவுக்கு அந்த வெங்காயம் படாமலே கண்ணீர் வந்தது. மல்லிகா அம்மாவை அதட்டினாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/88&oldid=1133780" இலிருந்து மீள்விக்கப்பட்டது