பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

75

என்னம்மா நீங்க! நேற்று உங்கள்கூட மார்க்கெட்டுக்கு வந்தபோது எத்தனை ஜனங்கள் தெருவில் அடுப்பு வைத்திருக்கிறதைப் பார்த்தேன். மழைபெய்யும் போது, தாங்க நனைந்தாலும் பரவாயில்லை, அடுப்பு நனையக்கூடாதுன்னு நினைத்து பாவாடையோட நின்னுக்கிட்டு புடவைங்களால அடுப்பை மூடின எத்தனை பெண்களைப் பார்த்தேன்! நாமாவது நாலு பேருக்குத் தெரியாமல் வறுமையை மறைக்க முடியுது. அவர்களால அதுகூட முடியவில்லை. மழை பெய்தாலும் ஒண்டுவதற்கு ஒரு இடமும், ருசியா இல்லாவிட்டாலும் சாப்பிடுவதற்கு ஒரு உணவும் இருக்கிற நீங்கள், நான் பழைய கஞ்சியை குடிப்பதற்கா அழுவது? பழைய கஞ்சியிலும் ஊசிப்போன கஞ்சியாப்போன அந்த ஜனங்களை அவமானப்படுத்துறது மாதிரி இருக்குது."

செல்லம்மா, மகளைப் பார்த்து, ஈன்ற பொழுதினும் பெரிது உவந்தாள். உலகத்தில் பலர் கஷ்டப்பட்டாலும், தன்னை மாதிரி யாருமே கஷ்டப்படவில்லை என்று. இதுவரை நினைத்து, அதனாலேயே அதிகமாகச் சோகப்பட்டு, அந்த சோகத்திலேயே ஒருவித சுகத்தைச் சுவைத்துவரும் அந்த அன்னைக்கு, மகள் சொன்ன சாதாரண உண்மை அசாதாரணமாகத் தோன்றியது. மகள் வந்த பிறகு, கணவன் குடிக்காமலேயே வருவதையும், வழக்கம்போல், பேச்சுக்குப் பேச்சு குதிரைகளை உதாரணமாகச் சொல்லாமல் இருப்பதையும், தன்னை அடிக்காமல் இருப்பதையும், சொல்லப்போனால், ஒருநாள் தன் கன்னத்தைப் பிடித்து "சொல்லத்தகாதபடி' கொஞ்ச வந்ததையும், இவள், 'இருந்த வயசுல எங்கேயோ போயிட்டு, இல்லாத வயசுல இப்படியா' என்று சொல், அவரை அப்புறப் படுத்தியதையும் நினைத்துக்கொண்டாள்.

உண்மைதான். மல்லிகா அந்த புறச்சூழ்நிலைக்கு ஏற்ப மாறியும் மாற்றியும் வந்தாள். அவள் தந்தை பெருமாள். இப்போது வீட்டுக்கு இரண்டு ரூபாய் அதிகமாகக் கொடுப்பதைக் கேள்விப்பட்டு அகமகிழ்ந்தாள். தந்தை, தனக்கு, இரவில் வந்ததும் ரகசியமாகக் கொடுக்கும் 'கேக்'குகளையும் இதர ஸ்வீட்டுகளையும், அவள் பகிரங்கமாக, பிள்ளைத் தாய்ச்சியான சந்திராவிற்கும். இதர பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்தாள். "என்னால் இது கட்டுப்படியாகாதுப்பா சாமீ! இந்த முட்டாப் பய மக்களும்.மிட்டாய் தின்ன ஆரம்பித்தால் யானைக்கு அல்வா வாங்கிட்டு வந்த கதையாத்தான் முடியும்" என்று பெருமாள் சிரித்துக்கொண்டே சொல்லி விட்டு, எங்கேயோ போனார். நிச்சயமாக வாய்க்குப் பட்டை தீட்ட அல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/89&oldid=1133782" இலிருந்து மீள்விக்கப்பட்டது