பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

வளர்ப்பு மகள்

மூடி, முகத்திற்கு சோப்புத் தேய்த்துவிட்டு, பின்பு எரிச்சல் தாங்கமுடியாமல் "சீக்கிரமாய் தண்ணீர் புடிக்கா, முகமெல்லாம் எரியுது" என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, திடீரென்று தவலையுடன் 'தவலை' மோதும் சத்தம் கேட்டது.

அப்போது, காலைப்பொழுது... மணி சரியாக எட்டரை இந்த மணி, அங்கே 'ஏழரை நாட்டான்' சனி மாதிரி 'வீட்டுக்கார அம்மாவின்' குடங்களுக்கு, குடித்தனக்காரர்கள் வழிவிட வேண்டும். அரைகுறையாக இருந்தாலும் சரி, அப்போதுதான் நீர் பிடித்துக் கொண்டிருந்தாலும் சரி, குடங்கள் எடுக்கப்படவில்லையானால், படிக்கட்டுகளில் தூக்கி, 'டங்'கென்ற சத்தத்துடன் வைக்கப்படும். கேட்டால் "காலிபண்ணு."

அந்த வழக்கமான பழக்கப்படி, வீட்டுக்கார அம்மா மாடியில் உதட்டைப் பிதுக்கிக்கொண்டே உலா வந்தபோது, வீட்டு வேலைக்காரப் பெண், மடமடவென்று குழாய்ப் படிகளில் இறங்கி, சந்திரா பிடித்துக் கொண்டிருந்த தவலைப் பாத்திரத்தைத் தூக்கி, அங்கிருந்தபடியே சுவருக்கு மேலே தூக்கி, மேல் தளத்தில் வைத்துவிட்டு, எஜமானியின் எவர்சில்வர் தவலைப் பாத்திரத்தை வைத்துவிட்டு, இன்னும் இரண்டு மூன்று சாதாரண தவலைப் பாத்திரங்களைக் கொண்டுவரப் போனாள். சந்திராவோ, வாயடைத்து, நெஞ்சடைத்து நின்றாள். அந்த வேலைக்காரப் பெண், உடம்பால் 'ரூபி' என்றாலும் குணத்தால் 'அரூபி'.

"இன்னுமா குழாய்ல தண்ணி பிடிக்கல? சீக்கிரம்" என்று சொல்லிக் கொண்டே கண் திறந்த மல்லிகா, எஜமானி பாத்திரங்களால், தங்கள் தவலைப் பாத்திரம் ஒதுக்குப்புறமாக இருப்பதைப் பார்த்துவிட்டு, தவித்தாள்.

அன்றைக்கு வேலைக்குப் போகாத ராக்கம்மா, அந்தப் பக்கமாக வந்து இந்த அநியாயத்தைக் கேட்டுதான் ஆகணும் என்று சொல்லிக் கொண்டே, முந்தானைச் சேலையை இடுப்பில் செருகியபோது, மல்லிகா அவளைக் கண்களால் கெஞ்சி, கால்களைப் பிடித்து இழுத்துத் தடுத்துவிட்டாள். இன்னும் இரண்டு மூன்று பெண்கள், ஏதோ கேட்கப் போனார்கள். பிறகு தங்கள் வாடகைப் பாக்கியை நினைத்தவர்களாய், வாய்க்குள்ளிருந்து வரப்போன வார்த்தைகளை அவை உதித்த நெஞ்சங்களுக்குள்ளேயே உலர்த்திக் கொண்டார்கள்.

எப்படியோ ஒருவழியாகக் குளித்துவிட்டு, அக்காள் கொடுத்த ஒரு அச்சடிப் புடவையை, உடம்பைக் காட்டிய ஈரப் புடவைக்கு மேலே சுற்றிக்கொண்டே, மல்லிகா வீட்டுக்குள் போனபோது. இன்னும் அதே மாடியில். அதே இடத்தில், அதே 'போஸில்' அதே பார்வையுடன் நின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/92&oldid=1133785" இலிருந்து மீள்விக்கப்பட்டது