பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

79

ரமணன், "என்னக்கா நீ, அவங்க குளிக்கிறது வரைக்காவது பொறுக்கக் கூடாதா" என்றான். அவன் சொன்னது அக்காள்காரிக்குக் கேட்கவில்லை. மல்லிகாவிற்குக் கேட்டது. அக்காளுக்கு, தான் சொன்னது கேட்கவில்லை என்பதும், கேட்கக்கூடாது என்பதும் அவனுக்குத் தெரியும். தப்பித் தவறிக் கேட்டிருந்தால், அக்காள், அங்கேயே அவனை வறட்டியைக் காயவைப்பது மாதிரி காய வைத்துவிடுவாள் என்பதும் அவனுக்குப் புரியும்.

அடடே இவனுக்குக் கூட மனிதாபிமானம் இருக்கே என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு நினைப்பில்லாமலே அவனை ஒருகணம் பார்த்துவிட்டு, மல்லிகா உள்ளே போனாள். அப்படிப் பார்த்தது தப்பாய்ப் போயிற்று. பல சினிமாக்களிலும், கதைகளிலும், கதாநாயகன், பலரை அடித்துப் போட்டுவிட்டு, அவர்களிடம் சிக்கிக்கொண்ட அபலைப் பெண்ணைக் காப்பாற்றிய பெருமிதத்தில் பார்ப்பானே ஒரு பார்வை - அந்தப் பார்வை தோற்கும்படி ரமணன் ஒரு பார்வை பார்த்தான் பிறகு 'முதலில் சினிமாவுக்குக் கூட்டிப் போகணும். அப்புறந்தான் மகாபலிபுரம்' என்று கணக்குப் போட்டுக் கொண்டான்.

கணக்குப் போட்டதோடு அவன் நிற்கவில்லை. கணக்கு நோட்டில் ஒரு தாளைக் கிழித்து, காதல் காவியம் ஒன்றை வரைந்தான். மேல்நாட்டுக் கதையைக் காப்பியடித்து ஒரு எழுத்தாளர் எழுதிய காதல் வரிகளை, அப்படியே அசல் காப்பியடித்து, கடைசியில் "கண்ணே. கலங்காதே. உனக்கு நான் எனக்கு நீ இருவருக்கும் இடையே யாருமில்லை. யாருமில்லாத சமயத்தில் பேசுவதற்கு நீ துடிப்பது போலவே, நானும் துடிக்கிறேன்" என்று எவனோ ஒருவன், எவளோ ஒருத்திக்கு எழுதி, அவள் படிக்குமுன்பே இவனுக்குப் படித்துக் காட்டிய வரிகளையும், எழுத்துப் பிழைகளோடு எழுதி, சிலாக் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டான்.

மாலை மயங்கி, மையிருட்டு வந்ததும், வீட்டுக்கார அம்மா மெயின் ஸ்விட்சை போடாத சமயத்தில் எதற்கோ நடைவாசலுக்கு வந்த மல்லிகாவின் அருகே ரமணன் போனான். அவள் கைக்குள் கடிதத்தைத் திணித்துவிட்டு, வெளியே போய்விட்டான். அநேகமாக சினிமாவுக்கு டிக்கட் 'ரிசர்வ்' செய்வதற்காக போயிருக்கலாம்.

முதலில் திகைத்துப்போன மல்லிகா, எதுவும் புரியாமல், குழம்பிப் போனாள். அதை தெருவிளக்கருகே போய்ப் படிக்கலாமா என்று நினைத்தாள். பிறகு, அதைப் படிக்காமலே அந்தப் பயல், பகவத் கீதையைப் பற்றி எழுதியிருக்கவா போகிறான்? என்று நினைத்து. அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/93&oldid=1133786" இலிருந்து மீள்விக்கப்பட்டது