பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

81

வளைத்து, முதுகுப் பக்கமாகக் கொண்டுபோய், கிழிசல்களை மேலும் கிழித்து, கீழே போட்டுவிட்டு, அப்பாவிற்குப் பின்னாலேயே வீட்டிற்குப் போனாள்.

இரவு ஏறிக்கொண்டே இருந்தது.

எல்லோரும் தூங்கி விட்டார்கள். உண்ட களைப்பில் தூங்குபவர்களைவிட உழைத்த களைப்பில் தூங்குபவர்களே அதிகம். படுத்துக்கிடந்த அந்த உழைப்பாளிகள், மூட்டைப் பூச்சிகள் கடிக்க முடியாத அளவிற்கு இறுகியிருந்த அந்த உட்ம்புகள், உயிர் வேறு, உடல் வேறாய் போனவர்கள்போல் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நூறு ரூபாய் கோணிக்கட்டைப் பறிகொடுத்த பெருமாள், துண்டை முகத்தைச் சுற்றிப் போட்டுக்கொண்டே, தூக்கத்தில்கூட வெளியே தலைகாட்ட விரும்பாதவர்போல், ஒருவித தப்பிப்பு மனோபாவத்தில், தூங்கிக் கொண்டிருந்தார்.

மல்லிகாவால் தூங்க முடியவில்லை. ரமணன் கடிதத்தைக் கிழித்துப் போட்டவள், இப்போது, தன் நெஞ்ச அணுக்கள் கிழிவதுபோல் புரண்டு கொண்டிருந்தாள் திடீரென்று அவளுள்ளே ஒரு நினைவு. இந்த சரவணன் ஒரு இளைஞன்தான். இவனை மாதிரி எப்போதாவது, இப்படிக் காட்டுத்தனமாகப் பார்த்திருக்கிறாரா? அவரோடு ஒன்றாக நடந்திருக்கிறேன். கை படும்படியாய் நடந்திருப்பாரா?

திடீரென்று. அந்த நினைவுகளோடு இன்னொரு நினைப்பு. இப்படி ஒரு கடிதத்தை, இந்த சரவணன் எழுதியதாய் நினைக்கையில், மேனியெங்கும் இப்படிப் பரவசமானால், அவர் எழுதியிருந்தால்... எழுதியிருந்தால்... எழுதவில்லையே. சொல்ல வேண்டியதை, சொன்னபிறகு கூட 'எப்படி இருக்கே?' என்று கூட அவர் எழுதவில்லையே அவர் எப்படி எழுதுவார்? பெண்ணியத்தின் பெயரால் என்னோட தர்மசங்கடமான பிரச்சனையை இலைமறைவு காய் மறைவாய் சொன்னபிறகு, அவர் என்னையோ நான் அவரையோ பார்க்கவில்லையே! நான் எங்கே இருக்கிறேன் என்பதை அவர் விரும்பியிருந்தால் கண்டுபிடிக்க முடியாதா? என்னடி இது? ஏதோ பீச்சுக்குப் போனது மாதிரியும் சினிமாவுக்குச் சேர்ந்து போனது மாதிரியும் அவர் கையிலடித்துச் சத்தியம் செய்து கைவிட மாட்டேன்னு சொன்னது மாதிரியும்...

அப்படியும். இப்படியுமாக நினைத்துக் கொண்டிருந்த மல்லிகா, எப்படியும் அவனைப் பார்க்கவேண்டும் என்று துடித்தாள். எப்படிப் பார்ப்பது? எப்படியாவது பார்க்க வேண்டும். அவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/95&oldid=1133790" இலிருந்து மீள்விக்கப்பட்டது