பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

வளர்ப்பு மகள்

மட்டுமல்ல, அவள் அப்பாவையும், அம்மாவையும் பார்க்க வேண்டும். அவரைப் பார்க்கக்கூட வேண்டாம். அவர்களைப் பார்க்க வேண்டும். அவர்களைப் பார்க்கக்கூட வேண்டாம். 'அவரை'ப் பார்க்க வேண்டும்.

காலையில் எழுந்ததும், அப்பா எழுவதுவரைக்கும், அவள் தளத்திற்கும், வீட்டிற்குமாக நடந்து கொண்டிருந்தாள். அவரோ, நூறு ரூபாய் போனதுக்கு, நூறுமணி நேரம் தூங்கப் போகிறவர்போல் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பாவை எழுப்பலாமா? கூடாது. அம்மாவிடம் சொல்லிவிட்டு, அவங்களையே அப்பாவிடம் சொல்லும்படி சொல்லி விட்டுப் போகலாமா?

ஒரு மாதமாகப் பொறுத்திருந்தவள். அந்த ஒரு மணி நேரமும் பொறுக்க முடியாதவளாய் தவித்தாள். அப்பா அனுமதி கொடுப்பார் என்ற தைரியத்தில், அதிகாலையிலேயே குளித்தான். அக்காளின் கல்யாணப் புடவையை வாங்கிக் கட்டிக் கொண்டாள். தம்பியின் கைக்குட்டையை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டாள்.

பெருமாள் எழுந்தார். 'டீ' குடித்தார். சிகரெட் பிடித்தார். மல்லிகா பக்குவமாகச் சொல்வதாக நினைத்து, படபடவென்று பேசினாள்.

"அப்பா, காலேஜுக்குத்தான் போகமுடியாமல் போச்சு அங்கே போய் என்னோட பி.யூ.சி.சர்டிபிகேட்டையும், டிரான்ஸ்பர் சர்ட்டிபிகேட்டையும் வாங்கிட்டு வந்துடுறேன். அப்பா லட்டர் கொடுத்தால்தான் பிரின்ஸ்பால் சர்டிபிகேட் கொடுப்பார். அதனால், அப்பாகிட்ட போய் ஒரு லட்டரை வாங்கிட்டு உடனே - உடனேயே புறப்பட்டு காலேஜில் போய் சர்டிபிகேட்டை வாங்கிட்டு வந்துடுறேன். பியூசியில் முதல் வகுப்பில் வந்த சர்டிபிகேட் என்கிட்ட இருந்தால் எப்போதாவது பிரயோஜனப்படும். இல்லியாப்பா?"

பெருமாள், மகளையே பார்த்தார். சரஸ்வதியே அவதாரம் எடுத்திருப்பது போன்ற தோற்றம் முதல் வகுப்பில் பாஸ் பண்ணியவள். அந்த 'அற்பப்பயல்' வீட்டிலிருந்தால் பி.ஏ. முடிச்சிட்டு, எம்.ஏ. படித்துட்டு கலெக்டராகூட போயிருப்பாள் முதல் வகுப்பு வாங்கியவள். முதல் வகுப்பு மட்டும் படித்த சொந்த அப்பன்கிட்ட வந்ததால் பிடிப்பு சொந்தமில்லாமல் போயிட்டுது. ஏன், நான் அவளைப் படிக்க வைத்தாலென்ன? அது எப்படி முடியும்? அதுலவேற ஒரு மாசம் ஆயிட்டுதே. இந்த கோணிக்கட்டு போனதுக்கே நான் இவ்வளவு வருத்தப்படுறேனே... அவள் கண்முன்னால படிப்பு போனதுக்கு எவ்வளவு வருத்தப்படுவா? அப்பனுக்கும் மகளுக்கும் எவ்வளவு பொருத்தம்! நான் போலீஸ்காரனுக்குப் பயந்து கோணியை விட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/96&oldid=1133932" இலிருந்து மீள்விக்கப்பட்டது