பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

83

இவள், ராமனுக்குப் பயந்து படிப்பை விட்டாள். கண்முன்னாலேயே, இரண்டுபேரும் கண்ணாய் நினைத்ததை கைவிட்டுட்டோம். கோட்டை ஆளவேண்டிய என் மகள், படிப்பையே 'கோட்டை' விட்டுட்டாள்! எப்படி இருந்த மகள், எப்படி இருந்த என் ராசாத்தி, என்னோட ரேஸ் பைத்தியத்தால் அவளுக்கு உதவ முடியாமல் ஆயிட்டு, கடவுளே நீ பயங்கரமான ஜாக்கிடா, உன்னை நம்பி வாழ்க்கைக் குதிரையில் பந்தயம் வைக்க முடியாது.

கணவன், மகளை அனுப்பி வைக்கத் தயங்குவதாக நினைத்து, செல்லம்மா 'ஒரு மாதமாய் அடைந்து கிடக்காள். போயிட்டு வரட்டும்' என்றாள்.

பெருமாள், மனைவி சொல்வதை மவுனமாகக் கேட்டுவிட்டு, பிறகு "உன் இஷ்டம். போகணுமுன்னால் போயிட்டு வா. ஆனால் அந்த 'அற்பன்'கிட்ட அதிக நேரம் பேசாதே. அதுக்காக பேசாமலும் வந்துடாதே. ஆயிரந்தான் இருந்தாலும், அவன் உன்னை வளர்த்தவன். கேட்பார் பேச்சைக்கேட்டு கெட்டுப்போன பயல். ஆனால் ஒண்ணு. நீதான் அவனுக்கு எதையாவது வாங்கிட்டுப் போகனுமே தவிர, அவன் கொடுக்கிற எதையும் வாங்கப்படாது. இந்த நாலு ரூபாய்தான் இருக்கு..."

"ஒரு ரூபாய் ஐம்பது பைசா போதும்பா..."

"பரவாயில்லை. இதுதான் நான் செய்யுற உருப்படியான செலவு. வச்சுக்கோ."

மல்லிகா, பணத்தை வாங்கிக் கொண்டாள். மீதிக் காசில், அப்பாவுக்கு ரசகுல்லா வாங்கிட்டுப் போகணும். அம்மாவுக்கு மசால் தோசை, நல்லா தின்பாங்க, மிச்சக் காசிருந்தால் சரவணனுக்கு ஒரு கைக்குட்டை.

மல்லிகாவிற்கு வெட்கமாக இருந்தது. அவன் பதிலுக்கு என்ன கொடுப்பான்? என்ன கொடுக்கணும்? இந்த அப்பா, அந்த அப்பாகிட்ட எப்படி எப்படி நடந்துக்கணுமுன்னு சொல்றாரே. நான் சரவணனைப் பார்க்கப் போறதும் தெரிந்தால்... அவர்கிட்டேயும் எப்படி எப்படி நடக்கணுமுன்னு சொல்வாரா?

அப்பா-அம்மாவைப் பார்க்கப் போகிற பாசத் துடிப்போடு. காதலித்தவனை காணப்போகிற நேச நெஞ்சோடு. அவள் புறப்பட்டாள். இதற்குள் விஷயத்தைப் புரிந்துகொண்ட 'இட்லி' ஆயா தங்கம்மா "வந்துடு கண்ணு... இருந்துடாதே" என்றாள். ராக்கம்மாள். நீ மட்டும் இங்கே வர்ல... நான் வீட்டைக் காலிபண்ணிடுவேம்மா..." என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/97&oldid=1133934" இலிருந்து மீள்விக்கப்பட்டது