பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

வளர்ப்பு மகள்

மல்லிகா சிரித்துக் கொண்டே புறப்பட்டாள். பெருமாள் பஸ் நிலையம் வரைக்கும் வழியனுப்ப எழுந்தார். செல்லம்மா தன் வயிற்றை இறுக்கிப் பிடித்துக்கொண்டே, 'அண்ணன் அவளை நாலு அடி அடித்தாவது அங்கேயே இருக்கச் சொல்லணும்' என்று நினைத்துக் கொண்டாள்.

பெற்றவனும், அவருக்குப் பிறந்தவளும், வாசலைத் தாண்டப்போகிற சமயத்தில் எதிர்ப்பக்கத்தில் இருந்து பெருமாளின் பதினேழு வயது மகன் பரமசிவம் படி வாசலை உட்புறமாய்த் தாண்டினான். சொக்கலிங்கத்தின் அரிசி மண்டியில் வேலை பார்ப்பவன். வேளச்சேரியில் இருக்கும் அந்த கடையைக் கவனித்துக்கொண்டு, அந்த கடைக்கருகே உள்ள ஒரு சின்ன அறையிலேயே தூங்கிக் கொள்பவன். மல்லிகா வந்த பிறகும், இன்றுவரை அங்கேதான் இருந்தான். சொக்கலிங்கமும், அவனைப் போகச் சொன்னதில்லை. பெருமாளும் அவனை வரச் சொன்னதில்லை.

பெருமாள், மகனை செல்லமாய் அதட்டினார்.

"என்னடா... காலங் காத்தால, இங்கே ஏதும் அரிசி மூட்டை கொண்டு வந்தியா..."

"ஒரேயடியா வந்துட்டேன்..."

"ஏண்டா?"

"நம்மளால் அங்கே இருக்க முடியாது."

"அதுக்கு என்னடா அர்த்தம்? சொல்றதைச் சீக்கிரமாய் சொல்லித் தொலையேண்டா."

"ஒண்ணுமில்ல. வழக்கமா வாரது மாதிரி மாமா. கடையில கணக்குப் பார்க்க வந்தாரு கூட அந்த சகுனி ராமசாமியும் வந்தாரு வந்ததும் வராததுமாய் அக்காவ. ராமசாமி நன்றிகெட்ட நாயின்னும், கள்ளின்னும் கண்டபடி பேசினாரு நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். முடியல. 'எங்க அக்காவை பேசினால், இடுப்பை ஒடிச்சிடுவேன்’னு கத்துனேன். உடனே அவன் உன் அக்காதான் போயிட்டாள். உனக்கு எதுக்குடா இங்கே வேலை? இங்கே நடக்கிறதை அங்கே சொல்றதுக்காக இருக்கியா? மானமுள்ளவனாய் இருந்தால் போயேண்டான்னான். நான் 'சரிதான் போய்யா'ன்னுட்டு வந்துட்டேன். சரி பசிக்குது. இட்லி இருக்கா?"

செல்லம்மா. பதறிப் பதறிக் கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/98&oldid=1133936" இலிருந்து மீள்விக்கப்பட்டது