பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தமிழக அரசின் பரிசு பெற்றது. தமிழ் யாப்பு வரலாறு, தமிழில் வினைச் சொற்கள். தமிழில் அகத்திணைக் கொள்கைகள் என்னும் நூல்கள் இவரால் ஆங்கிலத்தில் எழுதப் பெற்றவையாகும். மன்பதையின் முன்னேற்றங் கருதி இவர் படைத்த நாடகங்கள் மனைவியின் உரிமை, நெல்லிக்கனி, உப்பங்கழி, ஒரு நொடியில் என்பனவாம்.

மழலையர் ஆங்கிலப் பள்ளிகளைத் தமிழ்ப்பள்ளிகளாக மாற்ற வேண்டும்; தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை பயிற்று மொழி தமிழாதல் வேண்டும் என்னும் கொள்கையினைப் பரப்பத் தமிழ்வழிக் கல்வி இயக்கங் கண்டு அதனைத் தமிழகம் எங்கணும் நடத்தி வந்தார். எழுத்துச் சீர்திருத்தம் என்னும் பெயரில் எழுத்து மாற்றம் செய்து தமிழுக்கு ஊறுசெய்தலாகாது என்பதனைத் தம் கட்டுரைவழி அறிஞருலகத்திற்கு உணர்த்தினார். தமிழ்வழிக் கல்வி என்பதும் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை. என்பதும் அன்னாரின் இறுதிக் குறிக்கோளாக அமைந்தன.

இவர் எளிய தோற்றமும், உயரிய நோக்கமுங் கொண்ட பழுத்த தமிழறிஞர். சிறந்த சிந்தனையாளர், தனித்தமிழ் இயக்கத்திற்குத் தாமே புதிய சொற்களைப் படைத்து எல்லா நிலைகளிலும் எங்குந் தமிழ்வளர ஓய்வென்பதறியாது உழைத்த உரஞ்சான்ற வித்தகர். அனைத்துக்கும் மேலாகப் பண்புவழி உலகினை நடத்தத் தம் மதிநுட்பத்தையும், நூற்புலமையையும் அசைவிலா ஊக்கத்தோடு பயன்படுத்தி வந்த சான்றோர். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், இத்தலைமுறையில், பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப் பணிக்காகவே வாழ்ந்து பண்பின் திருவுருவாகத் திகழ்ந்த மூதறிஞர், செம்மல் மாணிக்கனார் 24.4.89இல் எதிர்பாரா வகையில் மறைவெய்தியது தமிழன்னையின் தவக்குறையேயாம்.