பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்மை நிலை 125

கெட்டாற் போல் ஆள்வினை வள்ளுவத்தையும் நினையாது கெட்டொழிந்தோம். “பொச்சாப்பு உடையார்க்கு நன்கு இல்லை’ (534) என்னும் பொய்யா மொழிக்குக் குறள் பிறந்த நாடும் மொழியுமே இலக்கியமாயின காண்.

நாம் வள்ளுவர்க்குப் பொய்யா அன்பர்களாயின், நம் தனி வாழ்வினையும், சமூகத்தினையும், அரசினையும், முயற்சிப் பூதத்தால் பிணிக்கவேண்டும். நாட்டுக் காப்பும் வரி விதிப்புமே இன்று அரசின் நோக்கங்களாய் நிற்கின்றன. குடிமக்களின் ஒவ்வொருத்தர் பசியும் நீங்க வேண்டுமாயின், புறநடை யின்றி ஒவ்வொருவரையும் முயற்சிப்படுத்தல் அரசின் முதல் நோக்கமாக வேண்டும். குடிமக்கள் அனைவரும் தொழில் செய்வரேல், அரசிற்குக் காக்கும் கடப்பாடு குறையும்; வரி வரவும் பெருகும். முயலாதாரைக் கட்டாயம் முயற்சிப்படுத்தலும், முயன்றும் தொழில் பெறாதார்க்குத் தொழில் பெருக்கிக் கொடுத்தலும், உழைப்புப் பயனைப் பிறர் வஞ்சியாதபடி உழைத்தாரே நுகரும் வண்ணம் சட்டக் காப்புச் செய்தலும், அரசின் தலைப்புதுக் கோள்களாதல் வேண்டும். உழையாதார் யாரும் இலர்; உறுபசியாளர் யாரும் இலர் என்பது வள்ளுவம் ஆதலின், தனித்தோர் வாழ்க்கையும் சுற்றுச் சூழலும் அரசின் அடிப்படையும் எல்லாம், நன்கு குறிக்கொண்மின் முயற்சி என்னும் வினைக்குன்றின்மேல் நிலைக்கொள்ள வேண்டும்.

மெய்ம் முயற்சியை இழிவு, மானக்குறைவு, நிலைத் தாழ்வு. அறிவுப் புறம்பு, தீவினை, குலப்பழி, அநாகரிகம் என்று பலவாய்ப் பேதைப்பட்டு நினைவார் நினைவெல்லாம் அழிந்தொழிகதில், முயற்சிக்கு இடையூற்றை நல்வாழ்வுக்கே இடையூறு என்று தெளிமின் மடிக்குத் துணை செய்வனவற்றைச் சாவுக்குத் துணையெனக் களை மின் ஆகாக் கொள்கைகளும், அணைத்துக் காவாச் சமூக வழக்கமும், ஆள்வினைக்கு இடைநின்று விலங்கின், கலங்காது ஒருகால் இருகால் பல்கால் எனைத்துக் காலாயினும், அறிவுத் துணிவோடு செய்வினை விடாது, அக்கோள்களையும் வழக்கங்களையும் உப்பக்கம் காண்மின் புறங்கண்டு நகுமின்!