பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 3 வள்ளுவம்

பொய்யாத் தூயசெய்ல் என்று விளங்கிக் கொள்ளல் வேண்டும், குறள் கற்பார் யாரும் தம் நெஞ்சத் தூய்மையை முதலெண்ணமாகத் துணிய வேண்டும். தம் வாழ்வுத் திருத்தமே குறளின் அக நோக்கம்: மற்றைக் கல்விக் காட்சியெல்லாம் புற நோக்கம் என்னும் அதன் பகுத்தறிவு வேண்டும்.

இவ்வாறு யான் துணிந்த திருக்குறட் கல்வியை வாய்மைக் கழகத்தார்க்கு மொழிந்தேன். “நீர் விரும்பியவாறே வாழ்க்கை நோக்கம் தலைவைத்துக் குறட் பொழிவு பல செய்ம்மின் !” என்று மறுமொழி கூறி அழைத்தனர். “உங்கள் கழகம் அண்மையில் தோன்றியது. ஆரவாரத்தொடு பிறந்த அன்றே இறந்து படுஉம் பிறபல் கழகங்கள் போலாது. நும் கழகம் திருக்குறள் போல நீடு வாழிய! தாய செயல் நோக்கொடு ஆசான் வகுத்த வள்ளுவங்களைச் செவ்வன் ஆய்ந்து தெளிந்தபின், தொடர்ந்து சில நாள் நும் கழகச் சார்பில் சொல்லாற்றுவேன்” என்று உடன்பட்டேன். இச்செய்தி மூன்றாண்டு கட்கு முன்னர் நிகழ்ந்தது. உறுப்பினர்கள் தம்முட் பகையின்றியும், தலைமை அவாவும் வேட்கையின்றியும், பொருளொழுங்கு உடைய ராய், செயல் வேட்கையினராய், கழகப் பொறுப்பைத் தத்தம் குடும்பப் பொறுப்புப்போல் தாங்குபவராய் நடப்பதுகண்டு, நாமெல்லாம் கழி பேருவகை எய்துகின்றோம். இன்ன ஒற்றுமை சால் உறுப்பினர் களைப் பெற்றியங்கும் வாய்மைக் கழகத்தின் சார்பில் வள்ளுவப் பெரும்பொருள் குறித்துச் சொல்லாற்றும் நான் நெஞ்சார்ந்த பெருமிதம் அடைகிறேன். நிற்க.

ஐந்து நாட் சொற்பொழிவின் கருத்துக்களை ஒருவாறு தொகுத்து நினைவுபடுத்தி மேற்செல்வேன். முதற் சொற்பொழிவில், “செயலே வள்ளுவர் நெஞ்சம் எனக் கண்டோம். ஒழுக்கம் என்பது ஆற்றொழுக்குப் போலும் இவ்விடையறா நற்செயலையே குறிக்கும். “தனித்தோர் நெஞ்சத் தூய்மையே வள்ளுவம் என இரண்டாவது உரைக்கண் அறிந்தோம். திருக்குறட்குப் பொதுமை நிலைக்களம் அன்று: மக்கள் மனமே நிலைக்களம் என்பது உம், நிலைப் பன்மைக்கு ஏற்ப அறப் பன்மை வகுப்பது திருக்குறள் முறை என்பது உம், அவரவர் வாழ்நிலையொடு பொருந்திக் கற்பதே குறட் கல்விநெறி என்பது உம் ஆண்டுச் சொல்லப்பட்டன.