பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுப் பிறப்பு 129

மூன்றாவது சொற்பொழிவு, பொருள் ஈட்டுதலும் ஈட்டுநெறி தூய்தாதலும் வேண்டும். அகத்துய்மையும் பொருள் ஒழுக்கமும் அகங்கை புறங்கை போல்வன என்று வலியுறுத்திற்று. உலகக் கடமையும் தன்னுரிமையும் ஒரு படியவாய்ப் பேணிக் கொள்வதே வள்ளுவம் என்றும், அறத்தான் வருவதே இன்பம் என்றும். பசி மாற்றும் ஈகை யாரும் செய்ய வேண்டுவது என்றும் நாலாம் பொழிவு யாப்புறுத்திற்று. ‘முயற்சி வினையே உயிர்நிலை என்பது ஐந்தாவது உரையின் கருத்து. இவ்வைந்து சொற் பொழிவுகட்கு இடையிடையே இன்றியமையாக் குறளடிப்படைகளை எடுத்து நிறுவினேன். செயற்கு வரும் அறங்கூறுவதே வள்ளுவம் எனவும், யாரும் வாழ்வாங்கு வாழ வழி வகுப்பதுவே வள்ளுவம் எனவும், உலகு ஒட்டும் அறங்கரைவதே வள்ளுவம் எனவும், யார்க்கும் ஒல்லும் நெறி காட்டுவதே வள்ளுவம் எனவும் யான் அறிந்தவாறு தெளிவுபடுத்தினேன். வாழ நூல் செய்தவர்; எளியார்க்கு இரங்குபவர்; யாரையும் எந்நிலைக் கண்ணும் கைதுக்கி விடுபவர் வள்ளுவர் என்று பட்டாங்கு வெளிப் படுத்தினேன்.

யார்க்கும் உள்ள நிலையினின்று உயர்ச்சிநிலை யுண்டு என்பது வள்ளுவம் என்றால் இக்கருத்து நன்கு விளங்கவில்லை. மக்களோ மிக்க ஏற்றத்தாழ்வுடைய பல நிலையினர். அவ்வாறாக எனைத்து நிலையினர்க்கும் முன்னேற்றம் உண்டெனின், அனைத்து நிலையினர்க்கும் உரிய ஒரு பொதுக்கால்கோள் என்கொல்? மக்களுள் பாம்பு போலும், தேள் போலும், அட்டை போலும், நாய்போலும், குரங்கு போலும், கொடிய பிறவுயிர் போலும் குணங்கெட்டார் பலராக இருக்கும்போது, எவ்வகை மக்கட்கும் வள்ளுவர் கொண்ட ஒரு பொதுவடிப்படை என்? யாரும் முன்னேறலாம் என்பது கேட்டதற்கு இனிய நம்பிக்கை பூட்டும் வள்ளுவம் ஆவதன்றி, மெய்யறம் ஆகுமா? இவ்வெல்லாம் தெளியத்தகும் வினாக்களே யாகும்.

“அறிவுப் பிறப்பு” என்பது இன்று உரையாற்றும் ஆறாவது சொற் பொழிவின் தலைப்பு. இத்தலைப்பே மக்கட்சாதிக்கு அமைந்த பொதுத் தன்மையைக் காட்டும். 2.