பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வள்ளுவம்

செல்லும் செக்குமாடும் பாரமாடும் போலாது, ஆய்ந்து ஆய்ந்து செல்லும் அறிவு வாழ்வு.

முன்னோர் வினைக்குத்தகத் தொழிற் பெயர் வழங்கினாற்போல வள்ளுவரும் நிலைக்குத்தகப் பண்புப் பெயர் சுட்டினார். ஒருத்தனை வாழ்நாள் முழுதும் பேதை என்றோ, புல்லறிவன் என்றோ, அறிவினன் என்றோ, கயவன் என்றோ, அறவன் என்றோ முடிவு செய்தார் அல்லர். பேதை நிலையும், புல்லறிவு நிலையும், அறிவு நிலையும், கயமை நிலையும், அறநிலையும் ஒருவன்பாலே ஒவ்வொருகால் காணத்தகுவன. மாறிவருவன. அவன் முழுப் பேதை, இவன் முற்றறிவன் என்ற அறியாத்துணிபு வள்ளுவமுரண்: வாழ்க்கை முரண். ஒருத்தனையே ஒரு நிலையன் என்று துணிய மாட்டாக்காலை, ஓரினம் முழுதையுமே, வஞ்சகர்ளனா, அறிவுடையர் எனா, அநாகரிகர் எனாக் கோடல் உலக முரண் அன்றோ! மக்கள் எந்நிலையினின்றும் கீழாக மேலாக எந்நிலைக்கும் மாறவல்ல பிறப்பினர் என்பது வள்ளுவம். ஆதலால்,

எப்பொருள் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு . - (423)

எனத் திருக்குறள் மெய்யறிவு வேண்டும்.

அரியன கற்று மனக்குற்றம் அற்றவர் என்று நாம் எண்ணிய பெரியோர் மாட்டும் அறிவின்மை காணப்படும்; சிறிதும் கற்றறியான் கண்ணும் பெருநலம் பயக்கும் ஒட்பம் காணப்படும் என்று நிலைத்திரிபு அறிந்தவர் வள்ளுவர். களிமண் பிடித்தாற் போலும் ஒரு நிலை அச்சுவார்ப்புகள் அல்லர் மக்கள். உயிராதலாலும், அறிவுப் பிறப்பாதலாலும், பொது வளர்ச்சியும் சிறப்பு வளர்ச்சியும் பெற்று மாறிச் செல்லும் இயல்பே மக்கள் நிலையாகும். அறக்கொடியான் எண்ணம் மாறி ஒரு நொடிப் பொழுதில் திருந்துவான். ஈர்ங்கை விதிராக் கயவன் ஒரு மனமாற்றத்தால் பண்ணன் ஆவான். அடங்கிய கண்ணகி ஆறாச் சினத்தள் ஆனதும் பரத்தைகுல மாதவி அறிவுடையளாய்க் குலப்பழக்கம் விட்டு, சீர்திருந்திய நங்கை ஆனதும் நினைய வேண்டிய நிலைமாற்றங்கள். ஒருவன் நெருநல் இருந்ததுபோல் இன்றும் இருப்பன் என எண்ணி வினை செய்வது உலகறிவாகாது. இப்படி விளக்குவதால், ஒருவரை