பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய நண்பர்களே!

5ால்லோர்க்கும் வணக்கம். திருக்குறளே என் சொற்பொழிவு களின் முழுப்பொருள். அப்பொருட்கு ஒரு பெருந்தோற்றுவாயாக, “வள்ளுவர் நெஞ்சம் என்பது குறித்து முதற்கண் சொல்லாற்று வேன். “வள்ளுவர் நெஞ்சம் வேறு, திருக்குறள் வேறா? குறளின் அகத்ததோ புறத்ததோ அப் பெருமகன் உள்ளம்? ஆசான் நெஞ்சுக்கும் குறள் நூலுக்கும் உரிய தொடர்பு என்கொல்” என்பது வினா. இவ்வினாவிற்கு விடையாகவும் என் பின்னைச் சொற்பொழிவு அனைத்திற்கும் உள்ளுறையாகவும் ஒர் அடிப்படைக் கருத்தினை இத்தொடக்கத்தே யான் சொல்லிவிடக் கடமைப்பட்டிருக்கிறேன். உளங்கொள்வது உங்கள் கடன்.

ஒருவன் வாழ்க்கைச் செயலெல்லாம் மனத்தின் விளைவு. மனத்திற்கு அமைச்சன் போல்வது அறிவு. ஆதலின், அறிவினை ஒருவன் மனக்கண் என்று கொள்ளல் சாலும். அறிவு வெளியீடே ஒருவன் சொல்லும் எழுத்தும் என்க. திருக்குறள் வள்ளுவனார் அறிவுக் குழவி. திருக்குறள் அவ்வறிஞன் நெஞ்சோடு நம் நெஞ்சினைப் பிணைக்கும் எண்ணக் கயிறு. திருக்குறள் அச் சான்றோன் உள்ளத்து நுண்ணிய நினைவை, தீட்டாத நம் அறிவிற்குக் காட்டும் பூதக்கண்ணாடி.

வள்ளுவர் நெஞ்சிற்கும் அவர் யாத்த ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களுக்கும் உரிய தொடர்பு என்னை? இட்ட வித்துக்கும், அதனில் தோன்றிய மரம் யாருங் காணப் பலவாகத் தாங்கிக் கொண்டிருக்கும் வித்துக்களுக்கும் பொருந்திய உறவினை ஒப்பிட்டுக் கொள்க: கொள்வீராயின், பின்வரும் கருத்துக்கள் புலனாம். வள்ளுவர் நெஞ்சம் நிலத்திட்ட விதை ஒக்கும்; அவர் நெஞ்சம் தந்த அறிவு அவ்விதை தோற்றிய மரம் ஒக்கும்; அவ்வறிவு வெளிப்படுத்திய குறள்கள் மரம் தாங்கிய விதைகள் ஒக்கும். மேலும்