பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வாங்கு வாழும் குடிமக்களே!

மெய்வணக்கம். மூன்றாம் நாட் பிறையன்று திருக்குறள் முதல் சொற்பொழிவு துவங்கினோம். பிறை வளர்தொறும் அதன் ஒளி உடன் வளருமாப் போல, நம் கூட்டம் பெருகுதொறும் புத்துணர்ச்சி பெருகக் காண்கின்றோம். நாள்தொறும் புதுமுகங்கள் தோன்றக் காண்கின்றோம். சென்ற ஞாயிற்றுக்கிழமை இவ்வவை தொடங் கிற்று. இன்று மறு ஞாயிறு. எட்டு நாட்களாகத் தொடர்ந்து கூடி, வாழ்க்கை நோக்கம் தலை வைத்துக் குறளை ஆராய்கின்றோம்.

முயலா மடியர்களும் கல்லா மடவர்களும் மண்டிக் கிடப்பது நம் நாடு. இன்ன கீழ்மக்கட்கு முயற்சியின் ஆண்மையையும் கல்வியின் விழுப்பத்தையும் வலியுறுத்துதற்கென, ஆயுத விழா என்றும், கலைமகள் விழா என்றும் முன்னோர் திருநாள் நிறுவினர். இந்நாட்களில் மடியர் வினைசெய்யத் தொடங்குவதில்லை; கல்லார் கற்க முனைவதில்லை. அதன் மேலும், ஐயகோ! நாம் காணும் முரண் என்ன? முன்னெல்லாம் முயற்சியுடையாருங்கூட, ஆயுத விழா வன்று கருவிகளையெல்லாம் குளிர்ப்பாட்டி வாளா மடிந்திருப்பர். கற்றாருங் கூட, கலைமகள் விழாவன்று நூல் ஏடுகளையெல்லாம் மூட்டை கட்டிக் கல்லாதிருப்பர். ஆள்வினைக்கு உரிய விழாவை மடிவிழாவாக, கற்றற்கு உரிய விழாவைப் பேதை விழாவாக மாறிச் செய்யும் திரிபுணர்ச்சி நம் நாட்டின் பண்பாய் ஊறிவிட்டது. நாட்டு நோக்கத்தினும், ஒன்றையொன்று தூற்றும் நோக்கமே பல்வகைக் கட்சிகளிடை வளர்ந்து வருவதுபோல, பெரியோர் சொல்லிய வற்றைச் செய்யும் உணர்ச்சியினும் அங்ஙன் சொல்லிய பெரியோரை வழிபடும் உணர்ச்சியே மக்களிடை முந்தி நிற்கின்றது. செயற்பாடே வழிபாடு; ஏனைய வெல்லாம் ஊரை ஏய்க்கும் போலிக் கூப்பாடு என்ற உண்மையை, வள்ளுவரையும் காந்தியையும் தோற்றிய இந்நன்னாடு அணிமையில் உணர்ந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.