பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்ப வாழ்க்கை 179

தன்னையும் மதிப்பது அறிவு நோக்கம். ஆதலின், குடிக்கடன் இயல்பாய உலகக் கடன் ஆகும். தன்குடி காப்பது தன் பொறுப்பு என அக்குடிப் பிறந்தோர் அறிவு பெறுவரேல், நாம் மலைக்கும் உலகத் துன்பங்கள் ஒரு நொடிப் பொழுதில் ஒழியாகொல்? பிறரைக் கொன்று குவித்து நாடு காக்கும் கொல்லாண்மை போலாது. தன் மெய்யை வருத்திப் பொருள் குவித்து வீடு காத்தலின், நல்லாண்மை (1026) என இனித்த பெயர்சூட்டினார் ஆசிரியர்.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலால் சோழப் பேரரசன் இராசராசன் புகழ்படைத்தான். மண் கொட்டிக் கல்லேற்றி அக்கோயிலை மெய்யாகவே உழைப்பால் நிறுவிய பல்லாயிரக் கூலித் தமிழ் மக்கட்கும் தனித் தனிப் புகழ் உண்டுகொல்? வரலாறு சிறந்த பெரும் போர்களில் படைத்தலைவர் சிலர் புகழ் பெற்று நிற்ப. அஃதன்றி மெய்யாகவே படைமுனை நின்று விலங்கி மன்னுயிர் வழங்கிய தனித்தனி மறவர்தம் புகழ்கள் யாண்டுளகொல் இந்திய விடுதலைப் போர் வரலாற்றில், அரிய சில தலைவர்கள் பெயர் உலகம் அறியுமாறு ஒளி தாங்கி நிற்ப, அத்தலைவர்தம் கட்டளையை மேற்கொண்டு பட்டிதொறும் ஊர்தொறும் வீறிட்டெழுந்து பல இழவுற்றுப் பலிக்கடன் ஆற்றிய தனித்தனித் தொண்டர்தம் புகழ் எழுதப்பட்டதுகொல் நாட்டு வரலாற்றில் ஆள்வார் சிலர் புகழுற்றுத் திகழ, சட்டத்தாலும் சமூகத்தாலும் நலிவுற்று, குழவி போற்றிக் குடிமை சுமந்த தனித்தனிக் குடும்பத்தினர் இசை எய்தியது உண்டுகொல் கூலியின் அற்றைப் புகழ், இராசராசன் ஆண்டுப் புகழாயிற்று. மறவர் பொதுப்புகழ் படைத்தலைவன் தனிப்புகழ் ஆயிற்று. தொண்டர் உட்புகழ் தலைவன் வெளிப்புகழ் ஆயிற்று. பலர் வீட்டுப் புகழ் ஆள்வான் நாட்டுப்புகழ் ஆயிற்று. பலர் வினைத் தொகுதி ஒருவன் ஒளிக்கற்றையாய் நிலவுகின்றது. தொண்டினும் மறவனும் கூலியும் தம் நாட் செயல்களை இயல்பு எனக் கொள்ளுப. இவையொப்பக் குடும்பியும் தன் குடும்பப் பொறுப்பை வாழ்வின் இயல்பு என எண்ணுவான். குடிதாங்குகை ஒருவன் பிறப்புக் கடன் என்ற கருத்தால், குடிசெயலை, கருமம் செய’ (1021) என்று குறள் கூறும.