பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 84 வள்ளுவம்

இவ்வாறு தலைவன் பிரிவுக் காலத்துத் தலைவிக்கு வேட்கை மனத்துள் நீளுகின்றது. பிரிவு என்பது காதலர்கள் ஓரிடத்து இல்லா அகற்சியைக் குறிக்கும், இடச் சேய்மையால் புணர் வெண்ணம் உள்ளடங்கி நிற்க, ஒருவர்க்கு ஏனையோர்தம் குணநினைவு அடிக்கடி தோன்றும். இடப் பிரிவு எல்லோர்க்கும் இயல்வதன்று காண். குடும்பமாகவே ஓரிடத்துச் சென்றிருந்து பொருளிட்டுவது இக்காலத்து வினையாயிற்று. நெடுநாட் புணராக் கால நீட்டிப்பே பிரிவின் உட்கோள்; ஆதலின் மீதுர்ந்த இன்பம் விழைவார் உரத்தாற் காமம் அடக்கி, உடனிருந்தும் பிரிவுத் துன்பம் மேற்கொள்வர்: இடையீடு செய்துக்கொள்வர்

ஊடல் புணர்ச்சியின் சிறப்படிப்படை. வேட்கைத் துடிபட்டுக் கூடும் நொடிப்புணர்வு விலங்குப் புணர்ச்சி போன்றது. இக்கூட்டம் உடற்கழிவாம் அன்றி, உயிர் நலம் ஆகாது. மெய்ம்முயக்கு ஆமன்றி, அன்புக் கூட்டம் ஆகாது. எண்ணம் மக்கட் பிறப்பின் தனிப் பண்பு. ஆதலால், எவ்வினைக்கும் எண்ணச் சிறப்பு ஊட்டல் வேண்டும். காதலர் தம்முள் பரிமாறிக் கொள்ளும் பேரெண்ணமே ஊடல் எனப்படும். பிரிவு என்னும் நெட்டிடை அகற்சி புணர்ச்சி வேட்கையை மிகுவிக்கும். ஊடல் என்னும் பாயற் சிறு பிரிவு புணர்ச்சி இன்பத்தை மிகுவிக்கும். ஊடி இன்பம் நுகர்ந்தார் நொடிக் கூட்டுறவை - அடிக்கடி புணர்தலை - நச்சார் என்பது வள்ளுவம். புணர்ந்து கையறுதற்கு முன், இன்ப நினைவுக் கூறுகளைக் கற்பனையால் எழுப்பிக் கொள்வார்க்குப் புணர்ச்சி வலுவுடைத்து. நிறையழிதல், புணர்ச்சி விதும்பல், புலவி, புலவி நுணுக்கம், ஊடலுவகை என்ற குறள் அதிகாரங்கள் கற்பார்க்கு ஊடற்கல்வியை நல்குவன.

ஊடல் காமத்தின் நுண்ணிய நாடி, இந்நாடித் துடிப்பு கூடல் என்னும் கலவை மருந்தால் அடங்குவது. ‘உப்பு அமைந்தற்றால் புலவி (1302) என்னும் உவமையால், ஊடுவார்க்குக் காம மயக்கத்தும் ‘அளவறிதல்’ என்னும் அறிவோட்டம் வேண்டும் என்பது போதரும். ஊடாப் புணர்வால் இன்பம் குறையும்; புணரா ஊடலால் அன்பு குறையும்.