பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்ப வாழ்க்கை 189

அவ்வினைகளையே பெண்ணினமும் செய்தாற்றான் மதிப்பு நிகர் என்றும், வேறுவினை செய்வதால் மதிப்பிழிவு என்றும் பறைசாற்றி வருகின்றோம். பெண்ணின் நிலையைக் கணித்தற்கு ஆண் நிலையன்றோ அளவாகின்றது என அடி முரனை உணர்ந்தோம் அல்லோம். மக்கட் பிறப்பினரேனும் உடல் வேறான பால் வேற்றுமையை நினைந்தோம் அல்லோம். இருபாற்கும் உரிய பொதுவினைகளும் உள. ஒருபாற்கே தகும் சிறப்பு வினைகளும் உள என்று பகுத்து அறிந்தோம் அல்லோம். குடும்பம் ஒரு சிறு உலகம்; ஆதலின், ஞால வாழ்க்கையை இரு சிறப்புக் கூறாகப் பிரித்து, ஆண்பாலார்க் கெல்லாம் ஒருகூற்றுக் கல்வியும் பெண்பாலார்க் கெல்லாம் மறுகூற்றுக் கல்வியும் வழங்கினோம் அல்லோம். கல்வி வேறு சான்ற இருபாலார் மனம் முழுக்குடித் தன்மைத்து என்ற குடும்பவியல் தெளிந்தோம் அல்லோம். இவ்வின்மைக் கெல்லாம் காரணமாவது நம் மயக்கக் கொள்கை. ஆணும் பெண்ணும் ஒரே துறைக் கல்வி, ஒரேவகை வினை மேற்கொள்வதுதான் பிறப்பொப்புமைக்குச் சான்று எனக் குடி கெடுக்கும் கோட்பாடு சாற்றுகின்றோம்.

உயர்வு தாழ்வு கணித்தற்கு உரிய செங்கோல் யாது தன் கடனைச் செவ்வன் செய்து முடிப்பவன் உயர்ந்தவன். முடிக்க மாட்டாதவனோ பிழைபட முடிப்பவனோ இழிந்தவன்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் (505)

என்றபடி, ஒருவர்க்கு மேன்மை கீழ்மை அவர் வினை மேல் வைத்துக் காண வேண்டுமே யன்றி, ஒருவர் நிலையை ஏனையோர் நிலையொடு ஒப்பிடப் புகுவதே முதற்கோணல் என்று அறிக. இந்திய நாட்டுத் தலைவனும் கழிவெடுக்கும் தோட்டியும் தத்தங் கடனைச் செய்யுங்காலை ஒரு நிகராவர். தலைவன் அரசுக் கடனைத் தோட்டி செய்ய இயலான் எனத் தலைவற்கு உயர்வு கூறுவிரேல், வீடுதோறும் கொல்லைப்புறம் சென்று கழி வள்ளும் தோட்டியின் தாய்க்கடனை அத்தலைவன் செய்ய மாட்டுவனோ? தோட்டி தன் வினையைப் பிழையாது ஆற்ற, நாட்டுத் தலைவன் தன் வினையைச் செய்யாது பிழைப்பானாயின், உயர்ந்தவன் தோட்டியல்லனோ தோட்டி