பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. வள்ளுவம்

காட்டும் வாழ்வியலாகும். இக்காட்சி முன்னர் அறுதியிட்டாங்கு, கற்பவர், கேட்பவர் தூய நெஞ்சினைச் சார்ந்தது எனத் தெளிக. தன்னை மட்டும் தனித்துச் சுட்டி நிற்கவல்ல தனிப் பொருள் மக்களுலகில் உண்டா? ஒரே பொருள், இடம் காலம் ஆளுக்கொப்பப் பல எண்ணங்களை எழுப்ப வல்லதாகும். ஒருவற்குப் பல்லுக் குத்தும் நினைவை. ஒருவற்குக் காது குடையும் நினைவை, ஒருவற்கு நகவழுக்கு எடுக்கும் நினைவை, ஒருவற்குப் பொட்டு வைக்கும் நினைவை, ஒருவற்கே பல்வேறு காலங்களில் இவ்வனைத்து நினைவுகளை, ஒரு சிறுதுரும்பு பிறப்பிக்கக் காண்கிறோம். ஆதலின் சொல் அடிப்படையாக அதனை அப்பொழுது சொல்லியான் எவ்வுள்ளத்தான் எனக் காண வேண்டும். காணும் இயல்பு தமிழர்க்குப் புதுமையன்று: தொன்னெறியாகும். இந்நெறியை நம் தமிழுக்கு இன்று முதனுாலாக வாழும் தொல்காப்பியம் நோக்கு என மொழியும். -

மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே. (தொல். 1361)

புலவனது உள்ளம் ஆராய்வார்க்கும் மக்களின் உள்ளம் காண்பார்க்கும் இந்நூற்பா பொய்யாக் கைவிளக்காகும். நோக்கு என்பது மேலோடான பார்வை யன்று; அழுந்திக் காணும் அகக்காட்சி. பிறன்மனை நோக்காத பேராண்மை (148) என்ற குறட்பகுதியில் இப் பொருளுண்மை அறிக. நோக்காத என்னும் சொல்லாட்சியால் பிறன் மனைவியை மனத்துட் கொளல் பிழை என்பது உம், இயல்பாய கண் பார்வை பிழையன்று என்பது உம் பெறப்படும். ஒருவன் வாய் திறந்து சொல்லாமுன்னரே, அவன் முகம் கண்களைக் கூர்ந்து பார்த்து உள்ளப் பொருளை அறிய வேண்டும். இக் குறிப்பறிவை கூறாமை நோக்கி (701) என்று குறள் ஆளும். கண்ணொடு கண்ணினை நோக்கு ஒக்கின் (1100) என்ற வள்ளுவர் காதற்குறளை, அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்னும் கம்பர் காட்சிப் பாவொடு நீங்கள் பன்முறை கேட்டிருப்பீர்கள். உள்ளம் தாக்கும் உரனுடைப் பார்வையைத்தான் இப்பெரும்புலவர்கள் நோக்கு’ எனச் சுட்டுப. நோக்கு அரிய நோக்கே என்னும் மணிவாசகத்தின்கண் இந் நுணுக்கப் பொருளை