பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 வள்ளுவம்

தன்னை எண்ணாது, செவி கைப்பச் சொற் பொறுக்கும் பண்புடை யாளனே வள்ளுவ வேந்தனாவான்.

முடியாட்சி, குடியாட்சி, பிறவாட்சி என அரசு வகை யாதாயினும் ஆகுக. எவ்வகை அரசியலும் அதனை மேற்கொண்டு நடாத்துவோர் குணஞ் செயல்களைப் பொறுத்தது. முன்னாள் ஆண்ட முடியரசரெல்லாம் நல்லன செய்யவில்லை என்றோ, செய்த வெல்லாம் தீயனவே என்றோ அறுதியிட முடியுமா? இன்று காணும் குடியரசுகள் அல்லவை செய்யா நல்லாட்சிகள் என்று உறுதி கூற முடியுமா? ஆதலின் வள்ளுவர் அரசுவகை பற்றி மொழியாது. அதனை இயக்குவான் மாட்சி பற்றியே கூறினார்.

ஒர் நல்லரசுக்கு ஆளுமாற்றல் ஒரிடத்து இருக்க வேண்டுமா? பரந்து கிடக்க வேண்டுமா? என்பது ஆராயத் தகும் பெரு வினா. முடியரசு தங்கு தடையற்ற ஒருவன் ஆட்சி என்றும் குடியரசு தடை பலவுடைய ஒருவன் ஆட்சி என்றும் ஒரளவு ஒப்பலாம் ஆயினும், பல பொழுது இருவகை ஆட்சிக்கும் நல்வேறுபாடு கண்டிலம். குடியரசு நாடுகளில் பல சட்டங்கள் முடியரசுத் தன்மையனவாக உள. போர்க் காலங்களில் இணைத்தென விளம்பமுடியாக் கடும் படைச்சட்டங்கள் உள. பாராளுமன்றங் கூடாமுன் புதுச் சட்டம் தலைவன் பிறப்பித்தற்குத் தனி விதிகள் உள. காரணங் கூறாது எத்துணைக் காலமும் யாரையும் சிறை வைப்பதற்கு ஏற்பாடுகள் உள. பெரும் பான்மை அரசுக் கட்சியினர் கொண்டுவரும் கொள்கையெல்லாம் நிறைவேறவும், எதிர்க்கட்சியினர் கூறும் திருத்தமெல்லாம் படு தோல்வியுறவும் காண்கின்றோம். ஒரு கட்சிவலுவுடைய நாடு அமைதியும், அஃதற்ற பல்கட்சிக் கூட்டு நாடு நிலையாக் குழப்பமும் உறக் காண்கின்றோம். இவ்வனையன எதனைக் காட்டுகின்றன? குடியரசின் கண்ணும் ஆளும் வன்மை ஒரு தனிக்கட்சிபாற் கிடத்தல் வேண்டும். இஃது - ஓரிட வன்மை - எந்நிலையரசுக்கும் பொது. இவ்வன்மையைக் கொண்டு ஒர் அரசு தன் குடிகளைப் பிறநாட்டுத் தாக்கலினின்றும், உள்நாட்டுக் குழப்பத்தினின்றும் காக்கவேண்டும். அஃதன்றி அடிக்கடி கடுஞ்சட்டம் இயற்றியும் கொடுந் தண்டனை விதித்தும் குடிமக்களை யெல்லாம் ஒரு படித்தாக அச்சுறுத்தப்படாது.