பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 0. வள்ளுவம்

இனைய பல் கருத்துக்களால், அரசின் தனிப் பேராற்றலைத் தீமைக்கு ஆளாதவாறு குறுக்கீடு செய்வர். படையை வெளிநாட்டுக் கொள்கைக்குத் துணையாகக் கொள்ளவேண்டுமே யன்றித் தன் நாட்டு மக்களை ஆள்வதற்குத் துணையாக்கப்படாது என்பர். படைப்பயன் புறப்பகையினின்றும் மக்களைக் காப்பதுவே யன்றித் தன் குடிமக்களினின்றும் ஆள்வார் தம்மைக் காத்துக் கொள்வதற்கு அன்று என்ற வள்ளுவம் குறிக்கொளத் தகும். இவ்வுண்மைக்கு, வேலன்று வென்றி தருவது (546) என்ற குறட்பகுதியே கரி. ஒரு பெருந் தொழிற்சாலைக்கண் பொறிகள் எத்துணை இருப்பினும், சிறந்து நிற்பவன் தொழிலாளி போல, திருக்குறள் வேத்தியற்கண் அரசன், அமைச்சன், தூதன், ஒற்றன், மறவன் என வினை செய்வார் பலர் பேசப்படினும், மூலப்பொருள் மக்களே என அறிக.

ஒர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை - (541)

என்பது வள்ளுவ அரசுப் பாயிரம். அகவியல் புறவியல் என்னும் அரசியற் பகுதி இரண்டனுள், மக்கட்கு அணிய தொடர்பு உடையது அகவியலாகும்; உள் நாட்டு நடப்பாகும். நாட்டின் உள்ளாட்சி முறைமை யுடையதாக இருப்பின், வலிய புறப்பகையும் வெல்லல் முடியாது; ஆதலின் ஒரரசு தன் குடிகளின் துணையை எஞ்ஞான் றும் போற்றிக் கொள்கை வேண்டும். பகைவன் வரவை நினைப்பதி லும், குடி மக்களின் இருப்பை மிகுந்து நினைக்க வேண்டும். நாட்டின் எல்லையைக் காப்பதினும், ஒரு குடியால் மற்றொரு குடி தொல்லைப்படாதவாறு கண்காணிக்க வேண்டும். வெளிப்பகை அடிக்க வருவதில்லை; ஒரொருகால் நிகழ்வது; நாடு முழுமைக்கும் பொதுவானது. தீய குடிப்பகையோ m இடந்தொறும் இருப் பது; புற்று நோய் போல் உள்ளரிப்பது. இங்கன் உடனிருந்து தீது இழைக்கும் குறும்புக் குடிகளை ஒறுப்பது அரசின் தனிப் பொறுப் பாகும். இப் பொறுப்பினை ஆற்றற் கென்றே அரசினை மக்கள் ஏற் படுத்தினர். அரசு செய்யாது பிழைக்குமேல், தடி எடுத்தவன் தண்டற் காரன் என்ற நிலை முற்றி மக்கள் விலங்காக அடித்துக் கொள்வர்.

குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் . (549)