பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் நெஞ்சம் 19

காணப்படுமாறில்லை. பூசற்கும், யாரும் யாதும் பேசற்கும் உரிய கட்சிக் கூட்டங்களில் இவ் வொழுங்கு காணப்படாமை வியப்பன்று. திருக்குறள் சொற்பொழிவுக் கேள்வியராகிய நீங்கள் ஒழுங்கமைதி காட்டுவது வழி காட்டும் இயல்பன்றோ நிற்க.

வள்ளுவர் நெஞ்சம் எனப் பெயரிய இம்முதற் பொருள், குறளனைத்திற்கும் நீங்கா உயிர்நிலையாகவும் நில்லாக் குருதி யோட்டமாகவும் அமைவது ஆதலின் அவர் நெஞ்சம் காண்டற்கு முன், காட்சிக்குத் தக்க அறிவு விளக்கம் நாம் பெறல் வேண்டும். அவ்விளக்கமாக, முன் சொல்லிய நோக்கு என்னும் அரிய பண்புக்கு நாள்வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் சில காட்டுக்கள் தந்து செல்வேன். இச்செலவால் வரும் பிறிதொரு பயன் யாதெனின், தமிழ்மக்கள் வழக்கும் தமிழ்ச் செய்யுள் வழக்கும் பூவும் கனியும் போன்ற உறவுடையன என்பது தெளியப்படும். கால்மணிப் பொழுது கொள்ளும் இந்நோக்கு விளக்கத்தை, மிகையெனா, புறம்பெனாக் கருதாதீர்கள். செல்லச் செல்ல இவ்விளக்கப் பயனை உணர்வீர்கள்.

நோக்கு எனப்படும் நெஞ்சுகாண் முறையை முதற்கண் வழக்குலகிற் பார்ப்போம். ஒரு வணிகன் சேலை யொன்றிற்கு ரூபாய் பதினைந்தென விலை பகர்கிறான். அவன் விலையைக் குறைக்க முடியாது என அழுத்திக் கூறும் நிலைகொண்டே மிகக் குறைந்த விலைக்குத் தருவான் என்று நாம் கண்டு கொள்கிறோம். இவ்வளவு உயர்த்திச் சொன்னாற்றான் மக்கள் அரைவிலை யளவுக் கேனும் வந்து நிற்பர் என்ற அவன் உள்ளக்கிடை புலனாகின்றது. ஒரு சிறு பையன் மணிப்பொறியொன்று கொண்டு வந்து, “நீர் தரும் விலையைத் தருக” என்று விரைகிறான். நாம் கேளாமுன்னே “என் அப்பன் மணிப்பொறி யிது. அவர் இறந்து விட்டார்; நோய் வாய்ப்பட்டுக் கிடக்கும் தாய் மருந்துச் செலவிற்கென விற்று வர என்னை விடுத்தாள்” என்று மன்றாடிக் கழறினாலும், குறைந்த விலை கண்டு மயங்கி உயர்ந்த விலை மணிப்பொறியை நன்மக்கள் வாங்கத் துணியார். அச்சிறான் சொல்லைப் பொருளாகக் கொள்ளார். சொல் வழியாக அவன் களவு நெஞ்சைக் காண்ப. “உங்களைப் பார்க்க வந்தேன்” என்று ஒருவன் சொன்னால்,