பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நடை 227

நடிகனையும், வெள்ளாடை உடுத்திய பெண்ணையும் ஒக்கும். எம் மொழிக்கண் ஓரிலக்கியம் தோன்றிற்றோ, அதனை அம்மொழிக்கண் கற்பதுவே முறையும் நிறைவும் ஆகும். மூல இலக்கியம் படிப்பது மாம்பழத்தை நாம் வாய்வைத்துச் சுவைப்பதை நிகர்க்கும். மொழி பெயர்ப்பு இலக்கியம் பார்ப்பது மாம்பழ வடிவாகப் பண்ணிய இனிப்புப் பண்டத்தைத் தின்பது ஒக்கும். மூல இலக்கியம் பிறமொழி மாறும்போது, உடல்மாறி நடைமாறித் தன் கன்னிமையை இழந்துவிடுகின்றது. இவ்விளக்கம் எம்மொழி இலக்கியத்திற்கும் பொது. நிற்க. - -

ஓரிலக்கியத்தை அதன் மூலமொழியிற் கற்கை பிறமொழி யாளர்க்கெல்லாம் கூடுவதன்று: கூடாமை ஏச்சுரையன்று. வேற்றின மக்களின் நாகரிக வரலாற்றை ஒரளவேனும் அறிந்து கொள்வோம் என்ற கருத்துடைய நாம் மொழிபெயர்ப்பு இலக்கியங்களைத்தாம் நம்பிக் கற்றாக வேண்டும். எனினும், ஒருவன் தன் தாய் இலக்கியத்தைக் கூட மொழிபெயர்ப்பு வாயிலாய்க் கற்க விழைவா னேல், அதனை என் சொல்வது? காலத்தின் கோளாறு என்பதனைக் காட்டிலும், முறைகெட்ட மயக்கநெறி எனத் தூற்றுக. இங்ஙன் தாய்மாறிக் கற்கும் தமிழரைவிட, யாதுங் கல்லாத் தமிழர் ஒருவகையால் சிறந்தவர் அல்லரோ வள்ளுவரை ஈன்ற தாய் வயிற்றுப் பிறந்தும், வள்ளுவரோடு உடன் பிறப்பு எடுத்தும், மொழி பெயர்ப்புத் திருக்குறளைக் கற்பாரேல், அவர் செயல் ஏனைத் தமிழர்க்கெல்லாம் நாணுடைத்து. பொய்யாத் தமிழன் கண்ட பொய்யில் திருக்குறளைத் தமிழனாய்ப் பிறந்தான் தமிழிற் கல்லாது, அங்ஙன் கற்றுப் பிறநாட்டார் வரைந்த மொழி மாற்றுத் திருக்குறளைக் கற்பானேல், அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்’ (958) என்றாங்கு. தமிழ்க் குடியிழுக்கம் கூறுவதிற்குற்றம் என்னோ திருக்குறள் கருத்து வகையால் உலக மக்கட்கெல்லாம் உரியது எனினும், மொழி காரணமாய் நமக்கு உறவுடையது; ஆதலின், அதனை உள்ளவாறு நாம் உணர்தலும், உணர்ந்தவாறு மொழி பெயர்த்து உலகிடைப் பரப்பலும் நம் கடன். ஞாலத் திருக்குறளை உரிய தமிழ் வாயிலாகக் கற்க முயலுமின் முயலுமின் என்ற உணர்ச்சியைப் பிறமொழி மாந்தர்க்கு ஊட்டலும் நம் பொறுப்பு.