பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 வள்ளுவம்

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று (150)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

இவ்வனைய குறள்கள் விட்டுவிடா நடையொழுக்கின, யாரையும் மேனிலை எழுப்பும் வள்ளுவர்தம் அடிப்படை நெஞ்சம் காட்டுவன: நாம் உய்யப் பிறந்தன.

9. மக்கள் அறிவுப் பிறப்பினர் என்றாலும், அதனை ஆளவேண்டும் என்னும் துடிதுடிப்பில்லாதவர்கள். ஒரொருகால் தோன்றும் புரட்சி நல்லெண்ணத்தை மீண்டும் மீண்டும் நினைந்து கொள்ளும் உறுதியற்றவர்கள்: பல வகையால் மயக்கத் தடிப்பு அடைந்தவர்கள். இன்னோர்க்கு அறத்தை அப்படியே சொல்வது பற்றுத் தேயாது ஈயம் பூசுவதை ஒக்கும். பலர்க்கு அறியாமை போக்கி அறிவு நல்காவிடின், அறிவும் அறியாமையுட் புதைந்துபோம். படிமாசு துடைத்து வண்ணம் தீட்டுமாப்போல, மயக்கம் களைந்து அறிவூட்ட எண்ணினார் வள்ளுவர் தடுத்து நிறுத்த உளங்கொண்டார். ‘நகுதற் பொருட்டு அன்று நட்டல் (784), ‘இன்மை ஒருவற்கு இளிவன்று (988), வேலன்று வென்றி தருவது (546), பொறியின்மை யார்க்கும் பழியன்று (618), ‘உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு g’ (993) எனவாங்கு, மனக் கற்பலகையில் ஏறிய அழுக்கை முதற்கண் கழுவுவர். அழுக்கின்மை செய்து கொண்டு, நட்பின் பயன் இடித்துத் திருத்தல் என்றும், “சால்பு என்னும் திண்மை இல்லாமைதான் இளிவு என்றும், முயற்சி மடிவே பழிப்பிடன் என்றும், ஒத்த பண்பே பிறப்பொப்புமை’ என்றும் உண்மை விளம்புவர்.

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை (57) மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் (280)

இவ்வெல்லாம் விளக்குநடை வாய்ந்தன; இருளோட்டி ஒளியூட்டுவன: புறச்சார்பு மறுத்து அகச்சார்பு வேண்டுவன.