பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நடை - 251

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்லெனும் சொல் (70)

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு (350) இவ்வனைய குறள்கள் உடனறம் கரையும் அதிகார அமைப்பின: ஒருகூறு உரைக்கும்போது நாணயம் போல் மறுகூறும் தெரிப்பன. நன்றியில் செல்வ அதிகாரத்து, சீருடைச் செல்வர் சிறு துணி (1010) என்பது உம், நாடு அதிகாரத்து வேந்தமைவு இல்லாத (740) என்பது உம், படைமாட்சி அதிகாரத்து தலை மக்கள் இல்வழி இல் (770) என்பது உம் உடனறம் மொழியும் பகுதிகளாகும்.

உடன் பிறப்பீர்! இதுகாறும் பதினான்கு வகைக் குறள்நடை பற்றியும், மூன்று வகை அதிகார நடை பற்றியும் விரிவு செய்தேன். ஏனைச் சொற்பொழிவுகள் போலாது, இதற்கு எடுத்துக்காட்டுப் பல வேண்டுதலின், ஓரினக் குறள்களைத் தொகை தொகையாகச் சொல்லிச் சென்றேன். இப்பதினேழுந்தான் திருக்குறட் பனுவலின் நடைகள் என்று முற்றுப்புள்ளி இட வேண்டா. ஆராய்ந்து காண விழைபவர், இன்னும் அளவிறந்த நடைக்கூறுகள் உண்மையைத் தெரிந்து கொள்வர். ஈதல் இயையாக் கடை (230), இல்லவள் மாணாக்கடை (53), நிலையின் இழிந்தக் கடை (964), “தந்நோய்போல் போற்றாக்கடை (315), பலர்நாண நீத்தக்கடை (1149) தாம் காதல் கொள்ளாக் கடை (1195) என வரூஉம் ஈற்றடிகளில் கடை என்னும் இறுதிச் சீர் நிற்கும் சொன்னடையை உன்னுமின். எச்சப்பொருள் தரூஉம் சொற்கள் பல இருப்பவும், இவ்விடங்களில் கடைச்சொல் வந்து விழுவானேன்? ஈதல் இயையாமை, இல்லவள் மாணாமை, நிலையின் இழிந்தமை, தந்நோய் போல் போற்றாமை, பலர் நாண நீத்தமை, தாம் காதல் கொள்ளாமை என்றவெல்லாம் கடைப்பட்டன என்னும் பொருட் குறிப்பும் தோன்றக் கடைச் சொற் பெய்தார் என்பது நினைக்கத் தகும். புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன்? (46) ஈண்டு ஒகார அளபெடை புறத்தாற்றுப் போக்கை ஒசையானும் இழித்து நகைப்பது போன்ற ஒரு குறிப்புப் படவில்லையா? நன்னர் அளபெடுத்துப் படிமின்!