பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் கருத்துரை 25.5

எதிர்ப்பினும், எப்பொருட் கண்ணும் இயல்பாக இறைவன் அமைந்து வாழ்தலைக் கண்ட மெய்யுணர்வினோர் இப்பிரிவு வழிகொள்ளார்; இறைக் கூறுடையராகவே எல்லோரையும் காண்பர்: ஆதலின், திருவள்ளுவர் ஆதிபகவன் முதற்றே உலகு என இறையுண்மையை - யாண்டும் உறையும் முதல்வனை - ஒரு முதற் குறளால் சுட்டி அமைந்தார்; ஏனைப் பின் ஒன்பது குறள்களால், மக்களாகிய நாம் இறைமை வளர்த்துக் கோடற்கு உரிய நெறியையும் பயனையுமே விரித்தார் என்று துணிக.

இறைமை எனப்படுவது பிறப்பின் அகப்பொருள்; பிடித்தற்கு வாராப் புறத் தீப்போல யாராலும் அவித்தற்கு ஒல்லா அகத்தீ. இத்தீயொளியை அற ஒழிக்க முடியாது எனினும், அதனை மறைக்கவோ வளர்க்கவோ மக்களால் இயலும். மடி என்னும் மூடி கவித்து, பேதைமை என்னும் வன்திரையிட்டு, பலர் இவ்விறை யொளியை இருள்படுத்தக் காண்கிறோம்; அதனால், அன்னோர் வாழ்வும் நெஞ்சும் குறுகக் காண்கின்றோம்; ஏனைய பிறப்புக்க ளெல்லாம் தமக்குப் பிறப்பில் அமைந்த இறையளவே உடையன; பின்னர்ப் பெருக்கிக் கொள்ளத்தகும் நினைவுக்கருவி அற்றன. மக்கட் பிறப்பு ஒன்றுதான், தீப்பொறியைப் பஞ்சினால் பெருக்கிக் கொள்ளுமாப் போல, உள்ள இறைமையை நினைவால் பெருக்கிக் கொள்ளும் தனியாற்றல் சான்றது. தன் பிறப்பிற்கே அமைந்த தனித் தன்மையை - நினைவாற்றலை - இறைமையை - எண்ணி எண்ணித் தூய்தாய் வளர்க்கா மகன், ஐயகோ சிறியவன்; பேதையன்; பிறப்பிழந்தவன். நாம் வேண்டுவது இறைக்கொள்கைப் பூசலன்று காண். பிறந்தார் யார்க்கும் உடம்புபோல் உள்ளாகிக் கிடப்பது இறை. உடல் நோய் தடுப்பான் மெய்வலி பெருக்குமாப் போல் மனமாசு அகற்றுவான் இறைவலியை - உள்ளொளியைப் பெருக்கல் வேண்டும் என்பது பிறப்பு வள்ளுவம்.

இறைமை என்பது குணமற்ற தனிப்பொதுப் பேராற்றல். “குணங்கள் தாம் இல்லா இன்பமே” என்பது திருவாசகம். தனக்கோர் குணமில்லா அவ்விறையாற்றல் ஆளும் மக்களைப் பொறுத்து, நல்ல தீய குணங்கட்கு இடனாய் மாறும் என்ற கருத்தால், “நன்மையும் தீமையும் ஆனார் போலும்” என்றும், “நல்வினையும் தீவினையும்