பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் கருத்துரை 269

ஆதலின், புறநிலை யறத்தின் பொய்யா உரைகல்லாவது வஞ்சனை யற்ற தூய பொதுநலம் ஆகும். கட்டொழுங்காகும். இப்புறவறம் குடிமேற்றாயினும், மொழிமேற்றாயினும், இனமேற்றாயினும், கட்சி மேற்றாயினும், நாட்டு மேற்றாயினும், உலக மேற்றாயினும், பரந்த நன்மை கருதிப் பழியின்றிக் கொளத்தகும் சிறப்பிற்று. அறத்துப் பால் பெரும்பான்மை ஒருவன் அகவாழ்க்கையறம் கூறுவது எனவும், பொருட்பால் பெரும்பான்மை ஒருவன் புறவாழ்க்கையறம் மொழிவது எனவும் கொண்டு கற்கதில்.

3. இற்றை உலகநிலையில் மக்கள் ஒழுகத் தகும் சிறப்பு வள்ளுவம் யாது?

உலகம் பலநிலைப்பட்டது. வினவிய நண்பர் கருதி யிருக்கும் இந்நாள் உலகத் தனிப்போக்கு யாதோ, அறிகிலன். எனினும், எனக்குத் தோன்றும் ஒரு பரந்த புது நிலையை வைத்துச் சில சொல்ல விழைவல்.

இது கொள்கைக்காலம். இயைபு உண்டோ இன்றோ, அறிவு உண்டோ இன்றோ, அரசியல், மதவியல், அறிவியல் எனவாங்கு எத்துறைக்கண்ணும் யாரும் கொள்கை யாடுகின்றனர். கொள்கை பரப்பற்கெனப் பலசில பொழுது தம் தொழில்களைப் புறக்கணிப் பதும் துறப்பதுங்கூடச் செய்கின்றனர். யார் நம்மொடு உரை யாடினும், அவர்தம் சொற்கிடை, சமயம், மொழி, அரசு, வாழ்வியல் குறித்து, அன்னவர் தழுவும் கோள்கள் யா? என்று காண்பான் நம் நெஞ்சு விரைகின்றது. ஒரு நன்மகன் கருத்துக்களை இயல்பாக மொழியினுங்கூட, இவன் இக்கொள்கையன் போலும்; வஞ்சகன் போலும் என்று கிளறிப் பார்த்து. ஐயுற்றுத் திரியும் புரையோடிகளே நம்முட் பலர்.

கொள்கைப்பற்று உடையது இக்காலம் என்று கூறுவதைக் காட்டினும், கொள்கை வெறிப்பட்டது இக்காலம் என்று சுட்ட விரும்புகின்றேன். பற்றுடையான் என்பவன் பிறர் யாரையும் அவமதியான்; தன் பூட்கைக்கண் பற்றிலாப் பிறரையும், ஒத்த மக்கட் பிறப்பு என்ற ஒரே காரணத்தால் நன்கு மதிப்பான்; அதனால், தன் மதிப்பைப் போற்றிக் கொள்வான். அன்பும் அறிவும் ஒன்றிய கொள்கைநிலைதான் பற்று என்ற நற்பெயருக்கு உரியது.