பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 - - வள்ளுவம்

ஒரு குறிக்கோட் பற்றினன் தானும் வாழ்வான்; மற்றவரையும் வாழ்விப்பான். வெறி என்னப்படுவது அன்பற்ற மூடக்கொள்கை, மனித இனத்தை வெறுப்பினும், ஒரு தனி மகனை அவமதிப்பினுங் கூட. ஒருவன் கொள்கை பற்றாகாது. வெறியென இழிக்கப்படும். வெறிகொண்ட நாய் விரைந்து அழியுமன்றோ மக்கள் பல கோளினராய் வாழ்தல் பழித்தற்கு உரியதன்று; நல்லுலக வளர்ப்பு நோக்கி, வரவேற்றற்கு உரியது. ஆயின், யார் கொண்ட எக்கோளுக் கும் மக்கட் பணிவும் திணியாப் பகுத்தறிவும் வேண்டப்படும்.

இது பிறிதோராற்றான் பதவிக்காலம் என்றும் கூறத்தகும். பதவி உயரின், தான் உயர்ந்த னாக ஒருவன் ஏக்கழுத்தம் உறுகின்றான். பதவி தாழின், அவ்வளவு தானும் தாழ்ந்து போயதாகத் தலைசாய்க்கின்றான். சுற்றுலகமும் அவனை அங்ஙன் ஏற்ற இறக்கமாகக் காண்கின்றது, நூறு ரூபாய் ஊதியத்தானை விட ஆயிரத்தான் பண்பால் பதின்மடங்கு உயர்ந்தவன் என்றும், பதினாயிரத்தான் நூறு மடங்கு உயரியவன் என்றும் நம் நெஞ்சு சொல்கின்றது.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர் (978)

என்ற அகநிலையை நாம் நடைமுறையில் பெரிதும் பொச்சாந்து அறிவுக்கூறு இழக்கின்றோம். பதவிக்கும் பண்புக்கும் நேர்முகமான காரண காரியத் தொடர்பு இல்லை. சிறு பதவியான் ஒழுக்கத்தால் பெருமையும், பெரும்பதவியான் ஒழுக்கத்தால் சிறுமையும் உடைய ராதல் உலகிடை அரியகாட்சி யன்று. குணம் பெரியனாயினான் பதவியிலும் பெரியன் ஆவானாயின், அவன் சிறப்புக்கும் நாட்டின் நலத்திற்கும் ஒரளவு இல்லை.

மேலை விளக்கத்தால் நாம் ஒழுகக் கிடப்பது என்னை? நம்மொடு பழகுவார் எக்கோளினர், எப்பதவியினர், எக்குலத்தினர், எச்சமயத்தினர், எம்மொழியினர், எவ்வரசினர், பிற எந்நிலை யினர் ஆகுக! அவ்வெல்லாம் பிற்பட, நம் பிறப்பினம் என்ற ஒரே தூய அடிப்படை எண்ணம் மேற்பட, அன்னவரோடு மனங் கலந்து அளவளாவல் வேண்டும்.