பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் கருத்துரை 281

அறியாதும் வாளா கிடப்பானேல், அவன் என் செய்வான், ஊழ் அவனை அங்ஙனமெல்லாம் ஆட்டுகின்றது என்று வம்புப் பொருள்படுத்தி வலிய சாவுக்கு ஏற்பாடு செய்கின்றோம்.

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவது எவன் - (379) தீயூழ் காணின் அலமந்து உலமந்து என் பயன்? கடக்க முயல். மடி பட்டு மடம் பட்டு என் பயன்? வாழ முயல் என்பது வள்ளுவம். இக்குறட்கு இக்கருத்துக் கொள்ளாது, நல்லுழை ஏற்றுக் கொண்டது போல் தீயூழையும் ஏற்றுக் கொள் என்று உரை செய்ப. அவ்வூழ் ஊட்டும் மடிமையையும் மடமையையும் நுகர்ந்து கொள் என்று நாட் டிற் கருத்துப் பரப்புப. ‘ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் (593) என்றால், கவலைப் பட்டுக்கொண்டு இராது, இழந்த பொருளை ஊக்கத்தால் மீண்டும் ஆக்கிக் கொள்வார் என்பது ஆசான் உள்ளம் அன்றோ? இவ்வுள்ளோட்டம் கண்டு திருக்குறள் கல்லாது பிறவாறு கற்பதெல்லாம் வாழ்வுக்குப் பாழ் என்பது என் துணிபு. மக்களாய்ப் பிறந்தார் வாழ்க்கை எஞ்ஞான்றும் அயரா அதிரா அசையா அறிவுடை முயற்சிவாய்ப்படல் வேண்டுமே யன்றி, ஊழின் முதுகை நாம் நகைத்துக் காணல் சாலுமே யன்றி, நம் முதுகை அது காணல் அடாது, அடாதுகாண். முயற்சி வாகை நாம் மலைக.

கனிந்த மன நண்பர்களே! இற்றைச் சொற்பொழிவுக்கும் என் சொற்பொழிவு அனைத்துக்கும் உங்கள்பால் ஒரு வேண்டுகோள் செய்வல். என் கருத்தைப் பிறர் ஏற்க வேண்டும் என்பதும், ஏற்குமாறு வலிந்தேனும் உரைக்க வேண்டும் என்பதும் என் குறிக்கோள் அன்று. ஏற்பதும் தள்ளுவதும் கேட்பாரின் அறிவுரிமை. வள்ளுவங்களாக என் மனத்துப் பட்டவற்றைப் பிறர் அறிய வேண்டும் என்பதும், விளக்கம் பெற அறியுமாறு அழுத்தம் பெறக் கூற வேண்டும் என்பதுமே என் உள்ளக்கிடக்கை.

ஒன்றேகால் மணிப்பொழுது பொறுமையொடும் ஆர்வத்தொடும் வீற்றிருந்து, ஆசான் கருத்துக்களைச் செவிமடுத்த உங்கட்குப் பெருநன்றி யுடையேன்.