பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 வள்ளுவம்

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற (300) எனத் தற்சான்று நடையில் உண்மைக் குறள் யாத்தார்.

“யாம் என்ற நடைப்பட்ட குறள் இன்னும் இரண்டுள. நாம் பெற்ற அறிவுப் பிறப்பின் தனிப்பேறு சுட்ட வேண்டி, பெறுமவற்றுள் யாம் அறிவதில்லை (61) என்றார். சிறப்புடைய பிறப்பு எடுத்தும், வாழ்க்கையில் பிறப்பிற்கு உரிய ஒழுக்கம் இல்லாதார் உள்ளத்தால் கயவர் என்று கீழ்மை காட்டுவான், “அவரன்ன ஒப்பாரி யாம் கண்டது இல் (1071) என்ப. இவ்விரு குறள்களும் நம் பிறப்பின் மேல் கீழ் நிலையை நினைவுறுத்தி நிற்ப, “யாம் மெய்யாக் கண்டவற்றுள் என்ற குறளன்றோ, நம் பிறப்பொழுக்கம் இதுவென அறிவுறுத்துகின்றது. எனவே, அறிவு வாய்த்த நாம் பொய்யாது ஒழுகும்போது, மக்கட் பிறப்பினர் ஆவோம்; வஞ்சித்து நடக்கும்போது, கயவர் என்னும் மக்கட் போலியர் ஆவோம் என்பது ஆசான் நெஞ்சம்; ஆதலின், வள்ளுவத்துள் வள்ளுவமாவது வாய்மை என்று ஒழுகுக செயல் நெஞ்சம் என்று முதற்பொழிவில் கண்ட வள்ளுவர் நெஞ்சமாவது வாய்மை நெஞ்சம் எனப் பற்றுக! இவ்வுயிர் நிலையை உள்ளவாறு அறிந்து, இவ்வவைக்கு வாய்மைக்கழகம் என மெய்ப்பெயர் அமைத்த மன்ற உறுப்பினர்களை நாம் பாராட்டுகின்றோம்.

பொய்யில் புலவர் தற்சான்று நடையில் வாய்மை யொழுக்கத்தை இன்னணம் வற்புறுத்துவானேன்? வாய்மையோடு ஒத்த நல்ல அறம் பிறிதொன்றும் இல்லை எனத் தனியழுத்தம் செய்வானேன்? அறங்களுள் அதற்கு வந்த முதற்பெருமை என்கொல்? அதனால் உலகிற்கும் ஒருவற்கும் விளையும் பெரும் பயன் என்ன? இவை நம் ஆய்வுக்கு உரியன.

மக்கட் பிறப்பிற்கே வாய்த்த தனியுடைமைகள் மூன்றுள. நினைவு, அறிவு, சொல் என்பவை அவை. அவற்றுள் நினைவும் அறிவும் அகம் ப்ற்றியன. சொல்லோ அகமும் புறமும் பற்றியது. ஒருவன் நினைவு அறிவுகளைப் புறத்தோர்க்குப் புலனாக்கும் ஒரு முதற் கருவி மொழியாகும். மொழியால் உலகம் விரைந்து இயங்குகின்றது; மக்கள் கூட்டுறவு பல்துறையாகப் பரந்து