பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மை நெஞ்சம் 291

பிறர் அறிய மெய்யனாதல் தஞ்சம் எளிது. என் பிறர் என்பார் பலதிறப்பட்டவர். ஒவ்வொரு செய்திக்கும் ஞாலத்து இருவேறு கட்சியினர் இருப்பர். தமக்கு வேண்டா ஒரு சாரார் உண்மையென ஒப்பினர் என்பதற்காகவே, பொய்யென முன் வந்து நிறுவுவார் பிறிதொரு சாரார். ஒருவன் உள்ளோட்டத்தை நுணுகி அறியும் பெற்றிமை புறவுலகிற்கு இல்லை காண். அதனால் அன்றே, கொலையாளி களவாளிகள் மன்றேறியும் விடுதலை பெறுப. குற்றஞ் செய்யாதார் மன்றுக்கு இழுக்கப்பட்டுத் தண்டம் உறுப.

பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினால்

மெய்போ லும்மே மெய்போ லும்மே

மெய்யுடை ஒருவன் ச்ொலமாட் டாமையால்

பொய்போ லும்மே பொய்போ லும்மே என்ற நறுந்தொகைப் பாக்கள் அறியா உலகப் பேதையியல்பை நாம் அறியச் செய்வன. ஊர் ஒப்புக் கொள்வது மெய், கொள்ளாதது பொய் என்றோ, தனக்கு நன்மை தருவது மெய், தீமை தருவது பொய் என்றோ எண்ணி மயங்கா வேண்டா. தன் நெஞ்சு அறிந்த செய்தி மெய் என்பதும், அங்ஙன் அறிந்ததை மறைப்பதும் மிகுப்பதும் குறைப்பதும் திரிப்பதும், தன் நெஞ்சு அறியாததைப் புனைந்து படைத்து மொழிவதும் எல்லாம் பொய்’ என்பதும் வள்ளுவ இலக்கணம். தன் நெஞ்சு அறிவது பொய்யற்க (293) என்பது வாய்மை உறைவிடன். யாம் மெய்யாக் கண்டவற்றுள் என ஆசான் தற்சான்று நடையில் கூறியதன் நோக்கம், வாய்மை யொழுக்கமாவது ஊர்ச்சான்று பற்றி நிற்பதன்று; ஒருவன் தன் மனச்சான்று பற்றியது என்று அறிவுறுத்தற்கு என்க. ‘பொய்யாமை பொய்யாமை ஆற்றின் (297) எனத் தன்மை சுட்டுவர். தான் நெஞ்சுணரக் கண்ட மெய்யையும் பொய்யையும், பிறர் பொய்யென மெய்யென மாறிக் கூறி எதிர்ப்பினும், அஞ்சி வழி மொழியாது மனச் சான்று கொல்லாது, உள்ளத்தாற் பொய்யாது ஒழுகும் உரவோனே, வாழினும் சாவினும், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் ஆவான் என்பது வள்ளுவக் குறிப்பு.

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க (293) என்ற நெஞ்சுச் சுட்டில், பிறிதொரு குறிப்பும் உண்டு. வாய்மைக்கும் பிறப்பிடன்