பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மை நெஞ்சம் 293

வராகவும், தம்பால் என்றும் மெய்வழங்கும் ஒழுக்கமுடையவராகவும் பெற்றோர் கற்பிப்ப.

பொய் என்பது உலக நாணயப் பெருமரத்தின் ஆணிவேரை அறுக்கும் கூர்வாள் என்றும், பொய்க்குந்தோறும் அவ்வேரினை அறுக்கின்றோம் என்றும் நினைத்துப் பார்க்க மக்கட்கு நெஞ்சில்லை. வாய்மைப் பேருழவன் நாணய வேருக்கு உரம் கட்டுகின்றான்: நீரூற்றுகின்றான்; உலகத் தனி மரத்தைக் காக்கின்றான். எத்துறைக் கண்ணும் நெஞ்சு கரியாக ஒழுகுபவன், தன் ஒரற வினையால் ஆற்றும் பரந்த ஞாலக் காப்பை மனமார நினைந்தன்றே அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று (297) எனப் பாராட்டினர். எனினும், மெய்யாகப் பொய்யாதான் எல்லா அறமும் செய்வான் என்பது ஆசான் உட்கிடை. வாய்மை என் செயற்கோள்’ என்று நாம் வாழ்க்கைக் குறிக்கோள் கடைப்பிடிக்க வேண்டும். பிடித்தபின், உலகப் பல சிக்கல்களிலிருந்து நாம் விடுதலை அடைகின்றோம். நம்மைப்பற்றிய சிக்கலுக்கு இடமின்றி. நம்மொடு பழகுவார்க்கும் உலகத்துக்கு விடுதலை வழங்குகின்றோம். இங்ஙன் உலகப் புற நாணயத்தையும் ஒருத்தன் அக நாணயத்தையும், சூல் கொண்ட பெண்ணின் உணவு போல, ஒருங்கு வளர்த்துக் காக்கும் தனியாற்றல் பொய்யில் சொல்லுக்கு அன்றிப் பிற எவ்வறத்திற்கும் வாய்க்கவில்லை யாதலின்,

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற (300)

என்ற வள்ளுவப் பெருநெறி வகுத்தார்.

பல்வேறு உலகச் சூழ்நிலையால் கொடிகள்போல் சிக்கல்கள் இயற்கையாகவே மாட்டிக் கொள்கின்றன. மெய்வழிச் செல்லின் அவைகள் தாமாகவே பிரிந்து நீங்கிப்போம். அங்ஙன் செல்லாது மக்களினம் பொய் வழிப்புகுந்து, இயற்கைச் சிக்குகளை அவிழ்க்க வாராச் செயற்கை முடிச்சுக்களாக - கொலைவாள் கொண்டு அறுக்க வேண்டும் படுமுடிச்சுக்களாக - போட்டுக்கொள்கின்றது. வாய்மையைப் பலபடியால் விளங்க விரிக்கும் இவ்வமையத்து, நம் காலப் போக்கைச் சிறிது உடன் எண்ணுமின் இந் நூற்றாண்டு செய்திப் பரவல் மிக்குடையது. செய்தி வெளியீடுகள்